பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சத்தமாக பாட்டு கேட்டால் நடவடிக்கை பாயும் என கேரள அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பயணம் செய்பவர்கள் பாட்டு கேட்பதும் வழக்கமான ஒன்று. பாட்டோ, வீடியோவோ, படமோ அவரவர் விருப்பத்துக்கு எதையாவது அலுப்பு தெரியாமல் பார்த்துக்கொண்டே பயணம் செய்வார்கள். ஆனால் அது செய்தாலும் அது அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தராமல் இருக்க வேண்டும். ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடல் கேட்டாலோ படம் பார்த்தாலோ சிக்கல் இல்லை. சிலர் ஓபன் வால்யூமை வைத்துக்கொண்டு அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தருவார்கள். இந்த இடையூரால் அருகில் இருப்பவர்களுக்குத் தான் பெரும் தொல்லை. இந்த பிரச்னைக்குத்தான் தற்போது கேரள அரசு தீர்வு கூறியுள்ளது.
தடை..
கேரள அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செல்போனில் அதிக சத்தம் போட்டு பேசவும், அதிக சத்தத்தில் பாடல் கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் நடவடிக்கை பாயும் என கேரள அரசு அறிவித்துள்ளது. ஒரு பெண் பயணியின் புகாரால் இந்த அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கேரள அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் கேரள போக்குவரத்துக் கழகத்துக்கு புகார் ஒன்றை அளித்தார்.
அதில், '' கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பேருந்தில் சென்றேன். அப்போது பேருந்தில் இருந்த ஒருவர் அதிக சத்தத்தில் பாடலைக் கேட்டார். இதனால் என்னால் தூங்க முடியவில்லை. என் தூக்கமே போய்விட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட கேரள அரசு இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்துகளில் அறிவிப்பு பலகை வைக்கவும், உரிய விதிமுறையை பயணிகள் பின்பற்றுவது குறித்து கண்காணிக்கவும் நடத்துநர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது
ரயிலிலும்...
இதேபோல் உத்தரவை ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது. அதில் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் யாரும் செல்போனில் சத்தம்போட்டு பேசவோ, பாட்டு வைக்கவோ கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது.
200 அடி பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்ட இளைஞர்...! ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்ட இந்திய விமானப்படை..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்