போலீஸிடம் சல்யூட் கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மலையாள திரைப்படத்தின் முன்னணி நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி. சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். தமிழில் சமஸ்தானம், தீனா, ஐ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாஜகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்நிலையில் நேற்று திரிச்சூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தில் புயல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்யச் சென்றிருந்தார்.
ஜீப்பில் சென்றபோது ஒல்லூர் காவல் துணை ஆய்வாளரைப் பார்த்து தனக்கு சல்யூட் அடிக்கச் சொல்லியுள்ளார். சுரேஷ் கோபி ஜீப்பில் இருந்து கொண்டே சல்யூட் அடிக்கச் சொன்னது தான் சர்ச்சையாகி உள்ளது.
அப்போது சுரேஷ் கோபி, நான் எம்.பி. எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சல்யூட் அடியுங்கள் என்று கூறியுள்ளார்.இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து சுரேஷ் கோபி மாத்ருபூமி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "கேரள அரசு எம்.பி.களுக்கு சல்யூட் அடிக்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தால், அந்த உத்தரவை முதலில் ராஜ்யசபா சேர்மனுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்து கேரளாவில் அப்படி ஏதும் உத்தரவில்லை என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நான் போலீஸ்காரரை சல்யூட் அடிக்க வைத்தேன் என்ற தலைப்பில் செய்திகள் வெளியாவதே கூட திட்டமிட்ட செயல். நான் அந்தக் காவலரை சார் என்று மரியாதையாகவே அழைத்தேன் என்றும் கூறியுள்ளார்.
இன்னொரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "நான் ஒரு ஜீப்பைப் பார்த்தேன். முதலில் அது வனத்துறை ஜீப் என்றே நினைத்தேன். அப்புறம் தான் அது போலீஸ் வாகனம் என்று தெரிந்து கொண்டேன். பின்னர் அதிலிருந்து இறங்கிய போலீஸ்காரரிடம் நான் ஒரு எம்.பி. எனக்கு சல்யூட்டுக்கான தகுதி இருக்கிறது சார் என்று தாழ்மையாகவேக் கூறினேன்" என்று தெரிவித்தார்.
இது குறித்து கேரள காவல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூறுகையில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று சட்டரீதியாக ஏதும் உத்தரவில்லை. ஆனாலும் காவல்துறையினர் மரியாதையின் நிமித்தமாக அவர்களுக்கு சல்யூட் வைக்கின்றனர். அப்படி இருக்கும் போது சுரேஷ் கோபி அதிகாரியிடம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்.