பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமான உச்சவரம்பு நிர்ணயம் செய்தது எப்படி என இந்திய உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும் ,பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
முன்னேறிய வகுப்பினருக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு நிர்ணயம் அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்று கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம் நடராஜ் தெரிவித்தார். மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள் கிரீமி லேயர்களாக கருதப்பட்டு, அதற்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே இடுதுக்கீடு வசதி அளிக்கப்பட்டு வருகிறது என்றும், 2015 ல் கிரீமி லேயர் வரம்பு 6.5 லட்சமாக இருந்த நிலையில், 2017 ல் அது 8 லட்சமாக உயர்த்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
கூடுதல் தலைமை வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். முன்னேறிய வகுப்பினரைப் பொறுத்த வரையில், சமுதாய நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கியுள்ளனர் என்று வாதம் ஏற்புடையதாக இருக்காது. அப்படி இருக்கையில், இவர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு (கிரீமி லேயர்) எப்படி பொருந்தும் என்று நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினர்.
பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டால் சமுதாய நிலையிலும் முன்னேற்றம் காணலாம் என்ற அடிப்படையில் தான் கிரீமி லேயர் கொண்டு வரப்பட்டது. ஆனால், முன்னேறிய வகுப்பினருக்கு சமுதாய நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாக இல்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்ற கேள்வியே இங்கு எழவில்லை என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், தேசிய வாழ்க்கைச் செலவின குறியீடு (national cost of living) அடிப்படையில் இந்த வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், 103வது அரசியலமைப்பு சட்டம் செல்லுபடியாகும் தன்மையை பெரிய அமர்வு விசாரித்து வருவதாகவும், தற்போது சட்டத்தை செயல்படுத்தும் விதம் குறித்து மட்டுமே விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் சில முக்கிய உத்தரவுகளை அறிவித்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு எதன் அடிப்படையில் ஆண்டு வருமான உச்ச வரம்பு நிா்ணயிக்கப்பட்டது. இந்த ரூ. 8 லட்சம் வருமான வரம்பு என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்துமா? ஏனெனில், அரசியலலைப்பு பிரிவு 15(6)ன் கீழ், முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநிலங்கள் ஆண்டு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாழ்வதற்கான செலவினம் மாறுபாடதா? மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெரிய மாநகராட்சிகளுக்கும், சிறிய நகரங்களுக்கும் செலிவினங்கள் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? எதனடிப்படையில் ரூ. 8 லட்சம் வருமான உச்ச வரம்பு நிா்ணயம் செய்யப்பட்டது? இதுகுறித்து விவரங்களைச் சேகரிக்க, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா? விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டனவா? எந்த தர்கத்தின் அடிப்படையில் அரசின் முடிவு அமைந்தது" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இது குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
27 % இட ஒதுக்கீடுக்கு யார் காரணம் மோடியா ஸ்டாலினா? | 27% OBC quota | M.k.Stalin | Modi