உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரானோரையும், கட்சிகளையும் மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று கிழக்கு அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். இத்தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மேற்கு அதிமுக மாநில செயலர் ஓம்சக்தி சேகர் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இதுவரை இரண்டு முறை மட்டுமே நடந்துள்ளது. தற்போது 3 வது முறையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இச்சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேதிகள் மாற்றி வரும் அக்டோபர் 12 ம் தேதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது.



இந்நிலையில் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


பிற்படுத்தப்பட்டவர்கள் கணக்கெடுப்பு எடுக்காமல் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது தவறு என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சூழலில், இட ஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது ஜனநாயகப் படுகொலை என திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்றத் தீர்ப்பு கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின் அலங்கோல செயலுக்குக் கிடைத்த அவமானம். கடந்த ஐந்து ஆண்டு காலக் கூட்டணி ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல், கிடப்பில் போட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளாட்சித் தேர்தலைப் பற்றி பேசுவது நகைப்பாக உள்ளது.


தனது ஆட்சி காலத்தில் உள்ளாட்சிக்கான வார்டுகளை பிரித்து மறுசீரமைப்பு பணி செய்ததில் மிகப்பெரிய குளறுபடி செய்தார். அதனடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக நீதிமன்றத்தின் கண்டனம் புதுவைக்கு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரானோரையும், கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.




புதுவை மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம் சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுவை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா? என்ற கேள்வி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தனி வார்டுகள், பழங்குடி மக்கள் வார்டுகள் சம்பந்தமான அறிவிப்பு வெளியிட்டு 3 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.


ஆனால் ஆணையம் அறிவித்த 3 நாட்களும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வேலை செய்யவில்லை. இதனால் எந்த அரசியல் கட்சிகளும் வார்டு ஒதுக்கீட்டைப் பார்க்க முடியாமல் திட்டமிட்டு மாநிலத் தேர்தல் ஆணையம் இந்தச் செயலைச் செய்தது. இதேபோலத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் வார்டு ஒதுக்கீட்டில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டின. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையும் பெறாமல் தான்தோன்றித்தனமாகத் தேர்தல் தேதியை அறிவித்தது. இதனால் இப்போது தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.


முக்கியப் பண்டிகையான தீபாவளி வர உள்ளது. இதையும் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதாவது தேர்தல் ஆணையம் அனைத்து நிலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு அனைத்துத் தரப்பு மக்களின் கருத்தைக் கேட்டு தேர்தல் தேதியை முடிவு செய்ய வேண்டும். உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கட்சிகளின் ஆலோசனைகள் பெற்ற பின்னரே தேர்தல் வார்டு வரையறை இறுதி செய்து தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று ஓம் சக்திசேகர் குறிப்பிட்டுள்ளார்.