பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிற எல்லா சமூகங்களை சேர்ந்த ஏழைகளுக்கும்  பொருந்துமா இடஒதுக்கீடு? வரலாறு என்ன சொல்கிறது? பார்க்கலாம்.


பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான (EWS) இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா  2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் 48 மணிநேரத்திற்குள் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவிற்கு அடுத்த நாளே குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினார்.


வரையறை:


எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்கான இடஒதுக்கீட்டின் கீழ் வராத பொதுப்பிரிவினர் EWSக்கான 10% இட ஒதுக்கீட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 1000 சதுர அடிக்கு குறைவான சொந்த வீடு இருக்கலாம். 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை பெற வருமானம் மற்றும் சொத்து சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.




தரவுகளை தராத மத்திய அரசு:


இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது ரூ.8 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட  பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர், தங்களின் பொருளாதார சூழலின் காரணமாக உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதிலும், அரசு வேலைகளில் சேர்வதிலும் இருந்து விலகி இருப்பதாக நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்தது. எனவே அவர்களின் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தது. ஆனால் அரசின் கல்வி, வேலைவாய்ப்பு நிறுவனங்களில் ஏற்கெனவே இருக்கிற உயர்சாதிகளின் பிரதிநிதித்துவம் குறித்து எந்த தரவுகளையும் சமர்பிக்கவில்லை.


அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்ன? 


இடஒதுக்கீடானது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளின் 15, 16 ஆகிய பிரிவுகளில் வருகிறது. அதாவது,சமூகம், கல்வி ஆகியவற்றில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கவும், அவர்கள் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யவும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது 50 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 69 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு என்பது குறிப்பிடப்படவில்லை. 




வரலாற்றில் EWS:


பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசு பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தது. அதன்படி 1992-ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கா இடஒதுக்கீட்டை கொண்டுவந்தபோது அந்த ஆணையை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ரத்னவேல் பாண்டியன் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்துள்ளார். தமிழகத்திலும் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, இடஒதுக்கீட்டைப் பெற 9,000 ரூபாய் ஆண்டு வருவாய் என்பதை ஒரு வரம்பாக அறிமுகப்படுத்தினார். ஓராண்டு அது அமலில் இருந்த நிலையில் பின்னர் நீக்கப்பட்டது. 


விமர்சனம்:


EWS இடஒதுக்கீட்டின்படி ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் கீழ் வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகக் கூறப்பட்டு இருந்தனர். 8 லட்சம் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் மாதத்திற்கு 66,000-க்கும் மேல் சம்பாதிப்பவர்கள். அவர்களை எப்படி ஏழைகள் என குறிப்பிட முடியும் என பலரும் கேள்வியெழுப்பினர். 2002-ஆம் ஆண்டுக்கு பிறகு வறுமைக்கோடு கணக்கெடுப்பு நடைபெறவில்லை. வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் குறித்து அரசிடம் தெளிவான கணக்குகள் இல்லாத சூழலில் 8 லட்சம் வருமானம் கொண்டவர்களை எப்படி ஏழைகளாக கருத முடியும் என்றும் அதனை எப்படி வரையறையாக வைக்க முடியும் என பலரும் கேள்விகளை எழுப்பினர்.


அதேபோல அரசியலமைப்பு சட்டத்தில் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு என்பது குறிப்பிடப்படவில்லை. எனவே மத்திய அரசு அறிமுகம் செய்த பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கே புறம்பானது என விமர்சனங்கள் எழுந்தன. பொருளாதாரம் என்பது ஒவ்வொருவரும் ஈடுபடுகிற தொழிலைப் பொறுத்து மாறக்கூடியது. பொருளாதாரம் என்பது அனைவருக்கும் எப்போதும் ஒரே சீராக இருக்கப்போவதும் கிடையாது. அதில் ஏற்ற இறக்கங்கள் வரலாம்.  பொருளாதார ரீதியில் இன்று பின்தங்கியவர்கள் நாளை மேம்படலாம். இன்றைய பணக்காரன், நாளை ஏழையாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்திய சமூகத்தில் இன்றைய தினத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் என்றைக்கும் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவராகத்தான் இருப்பார் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.


எனவே பல்லாண்டுகளாக சமூக ரீதியாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருந்த SC, ST, OBC பிரிவினருக்கு வழங்குவது போன்ற இடஒதுக்கீடு பொருளாதாரத்தை அளவுகோலாகக் கொண்டு பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்கு வழங்குவது, இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளதாக தெரிவித்தனர் விமர்சகர்கள். மேலும் இடஒதுக்கீடு இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. அரசு அதற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களை அதிகப்படுத்துவது போன்று தனது கொள்கைகளை விரிவுபடுத்த வேண்டுமே தவிர இடஒதுக்கீட்டில் கைவைக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.


பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வந்த பிறகு எஸ்.சி, எஸ்.டி, ஓபிசிக்களின் கட் ஆப் மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண் பெற்ற உயர்சாதியினருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைத்ததும் தெரியவந்துள்ளது.  




எனவே எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்கான இடஒதுக்கீட்டின் கீழ் வராத பொதுப்பிரிவினர்தான் EWS-க்கான 10% இட ஒதுக்கீட்டை பெறுவார்கள். எல்லா சமூகத்தை சேர்ந்த ஏழைகளையும் கருத்தில்கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை.