Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு நடிகை சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். 


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:


ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார். இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.


இசையமைத்த நடிகை சுகன்யா:


இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு நடிகை சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார். பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது. ஆடியோ வடிவில் முதலில் வெளியிடப்பட உள்ள 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் விரைவில் வீடியோவாகவும் வெளியாக உள்ளது. 


பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா திறம்பட செய்துள்ளார். பாடலின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 


பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, "500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்," என்று கூறினார். 


மேலும் தகவல்களை பகிர்ந்த அவர், "ஸ்ரீ ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் மற்றும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோவிலை நாமும் காணும் பாக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது," என்றார். 


'ஜெய் ஸ்ரீ ராம்' பாடலுக்கு பங்களித்த இசை வாத்திய கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவதாகாவும் கூறினார்.  




மேலும் படிக்க


Ram Mandir : ஊடகங்களே உஷார்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பன்று இதை செய்ய வேண்டாம்.. மத்திய அரசு அதிரடி


Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு - எங்கெல்லாம் விடுமுறை? மாநிலங்கள் லிஸ்ட் இதோ!