Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில்:
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், நவம்பர் 17ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 27ஆம் தேதி வரை மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
அதன் பிறகு, டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. இதனை அடுத்து, நாளை கோயில் நடை அடைக்கப்படுகிறது.
5 லட்ச பக்தர்கள் தரிசனம்:
மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெற்றது. நெய்யபிஷேகத்திற்கு பிறகு இன்று இரவு அத்தாள பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப ஊர்வலம் நடைபெறுகிறது. ஐயப்பனின் இந்த வீதி உலா சரம்குத்தி வரை சென்று பின்பு மீண்டும் சன்னிதானம் வருகிறது.
ஐயப்பன் கோயிலில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பின்பு, அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட உள்ளது. நடப்பாண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
குறிப்பாக, லட்சக்கணக்கான பக்தர்கள் அடுத்தடுத்த நாட்களில் குவிந்ததனர். இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நடப்பு 2023-24ஆம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் வந்த மொத்த வருவாய் ரூ.357,47,71,909 என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
எத்தனை கோடி ரூபாய் வருவாய்?
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சீசனில் 44 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் காணிக்கையாக அளித்த பொருட்கள், நாணயங்கள் ஆகியவை கணக்கிடவில்லை என்றும் கணக்கிட்டால் மேலும் ரூ.10 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மேலும், அரவணை மூலம் ரூ.146.99 கோடியும், அப்பம் மூலம் ரூ.17.64 கோடியும், பக்தர்களின் காணிக்கையும் சேர்த்து ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மகர, மண்டல பூஜை காலங்களில் ரூ.347.12 கோடி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.