உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
எதிர்பார்ப்பை எகிற வைத்த ராமர் கோயில் கும்பாபிஷேகம்:
கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கோயிலின் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவோ பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவோ செய்திகளை வெளியிடவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்:
செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தலில், "சமூக நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் சீர்குலைக்கும் சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும், போலியான செய்திகள் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது தெரிய வந்துள்ளது.
எனவே, இதை மனதில் வைத்து கொண்டு, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக செய்திகளை வெளியிடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்ககும்படி சமூக ஊடக தளங்களை கேட்டு கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றன.
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதியன்று மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, புதுச்சேரி, திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.