Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் குழுமம், ஜனவரி 22ம் தேதி தனது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:


ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர்.


அரைநாள் விடுப்பு வழங்கிய மத்திய அரசு:


ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ம் தேதியன்று மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா: 


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோயிலின் பிரமாண்ட குழமுழுக்கு விழா நடைபெறும் ஜனவரி 22 அன்று பொது விடுமுறை என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பொது விடுமுறை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி: 


அயோத்தியில் ராமர் கோயிலில் குழந்தை ராமரின் சிலை நிறுவப்படுவதையொட்டி, புதுச்சேரியில் ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் என் ரங்கசாமி அறிவித்தார். இதையடுத்து அன்றைய நாளில் புதுச்சேரி அரசின் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் ஜனவரி 22 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திரிபுரா


அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திரிபுராவில், ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.


மத்தியபிரதேசம்:


மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு நாள் முழுவதும் விடுமுறை வழங்கியுள்ளதோடு, மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் அன்றைய நாளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குஜராத்:


குஜராத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜனவரி 22 அன்று பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.


ராஜஸ்தான்:


ராஜஸ்தான் மாநிலத்திலும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் மீன் கடைகளை மூடவும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஒடிசா:


குடமுழுக்கு விழாவையொட்டி ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணி அரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அசாம்


அசாம் அரசும் ஜனவரி 22ம் தேதியன்று தங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளது.


உத்தராகண்ட்:


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2:30 மணி வரை மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அன்றைய நாளில் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உத்தரபிரதேசம்:


ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலமே முற்றிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை தீபாவளி போன்ற பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.


கோவா:


உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து கோவாவிலும் ராமர் கோயில் குடமுழுக்கினை கொண்டாட,  ஜனவரி 22ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலையை நிறுவுவது என்பது நாடு தழுவிய உற்சாக நிகழ்வு என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். அன்றைய நாளை தீபாவளியை போன்று கொண்டாடவும் பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


சத்தீஸ்கர்:


ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடும் வகையில், சத்தீஸ்கரிலும்  ஜனவரி 22ம் தேதி அன்று அரசு பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரியானா:


நாடு தழுவிய கொண்டாட்ட அலையில் சேரும் நோக்கில், ஹரியானாவிலும் ஜனவரி 22ம் தேதி அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித விழாவையொட்டி அன்றைய நாளில் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் குழுமம் விடுமுறை:


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் உள்ள தங்களது நிறுவன ஊழியர்களுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.