கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சிக்கித் தவித்து வரும் இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவால் நடைமுறைகளை மேற்கொள்ள உள்ளதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம்


வாடியா குழுமத்திற்குச் சொந்தமான கோ ஃபர்ஸ்ட் (Go First) சுமார் 53 விமானங்களை கொண்டு இந்தியாவில் சுமார் 34 இடங்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது.  இந்நிலையில், அமெரிக்காவில் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடம் இருந்து விமான இன்ஜின்கள் முறையாக விநியோகிக்கப்படாததால் விமான சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது கோ ஃபர்ஸ்ட்.  தற்போதைய நிலவரப்படி, சுமார் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாக தெரிகிறது. 


இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் 13 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதனால் மே 19ஆம் தேதி வரை சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  சுமார் 17 ஆண்டுகளாக பல லட்ச மக்களுக்கு விமான சேவை அளித்த கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம், தற்போது திவாலாகி உள்ளதால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.


கோ ஃபர்ஸ்ட்டை தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட்


இப்படி இருக்கும் நிலையில், தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NLCT) கடந்த திங்கட்கிழமை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்  நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்திற்கு கடன் வழங்கும் நிறுவனமான ஏர்காஸ்டில், ஸ்பைஸ்ஜெட்டுக்கு எதிராக திவால் செயல்முறையைத் தொடங்க ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலுக்கு ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


இதுபற்றி ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் கூறுகையில், ”ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவால் நடைமுறையை மேற்கொள்ள உள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. இது தொடர்பான வெளியாகும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். நாங்கள் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தை இயக்குவோம்.


மேலும், சில விமானங்களை புதுப்பிக்க 50 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்திய பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தக முடிவில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதம் சரிந்து ரூ.29.62 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


இந்தியா உள்பட 180 நாடுகளில் அறிமுகமானது Google BARD AI..! அப்படி என்றால் என்ன?