கர்நாடகாவில் வியாழக்கிழமை அன்று நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அதற்கு அடுத்த நாள் நடைபெறும் நடைபயணத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


 






இந்திய ஒற்றுமை பயணம் தொடங்கியபோது மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாண்டியா மாவட்டத்தில் இருந்து முதல்முறையாக நடைபயணத்தில் இணைகிறார். நாளை கர்நாடகா சென்றடையும் அவர், ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பங்கேற்பதற்கு முன் இரண்டு நாட்கள் கொடகில் தங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.


கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் தமிழ்நாடு மற்றும் கேரளாவைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று கர்நாடகாவிற்குள் சென்றடைந்தது. பாஜக ஆளும் கர்நாடகா வழியாக 21 நாட்களுக்கு நடைபயணம் நீள்கிறது. அதில், 511 கிலோ மீட்டருக்கு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் நடந்தே செல்ல உள்ளனர்.


இந்த நடைபயணம் ஐந்து மாதங்களில் 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மற்ற கருத்து தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால், மக்களைச் சென்றடைய கட்சிக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி இந்திய ஒற்றுமை பயணம்தான் என்று ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்திருந்தார்.


இது தொடர்பாக பொது மக்கள் முன்பு பேசிய அவர், "அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாடாளுமன்றத்தில் எங்கள் மைக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவை செயல்பட அனுமதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் தொந்தரவுப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், எங்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி பாரத் ஜோடோ யாத்ரா.


இந்த நடைபயணத்தை நாட்டிலுள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஏனெனில் இது 'இந்தியாவின் நடைபயணம். இந்தியாவின் குரலைக் கேட்கும் நடைபயணம். இதை யாராலும் அடக்க முடியாது" என்றார்.


விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், 150 நாட்களுக்கு 'இந்திய ஒற்றுமை' நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நடைபயணத்தின் போது, ​​காங்கிரஸ் தலைவர்கள், நாட்டின் பல பகுதிகளில் மக்களுடன் உரையாடி பேரணிகளை நடத்தி வருகின்றனர்.