பாஜக அரசு, விநோதமான உத்தரவுகளை பிறப்பிப்பது வழக்கமாகவிட்டது. அந்த வகையில், தொலைபேசி அழைப்பு வரும்போது இனி மக்கள் ஹலோ சொல்வதற்கு பதில் வந்தே மாதரம் சொல்ல வேண்டும் என மகாராஷ்டிர அரசு புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி வார்தா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கண்டிவார் பேசுகையில், “வந்தே மாதரம் என்றால் நாம் நம் தாய்க்கு தலைவணங்குகிறோம். எனவே, வணக்கம் என்பதற்கு பதிலாக வந்தே மாதரம் என்று சொல்லுங்கள்" என்றார்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவில் மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அதிகாரப்பூர்வ அல்லது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வரும் போது "ஹலோ" என்பதற்குப் பதிலாக "வந்தே மாதரம்" என சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது கட்டாயமில்லை, ஆனால் துறை தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'ஹலோ' என்பது மேற்கத்திய கலாச்சாரத்தை சித்தரிப்பதாகவும், அந்த வார்த்தைக்கு குறிப்பிட்ட அர்த்தம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஹலோ என்ற வார்த்தை, ஒரு சம்பிரதாய வார்த்தை என்றும் அது எந்த விதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வந்தே மாதரம்" என்று கூறி மக்களிடம் பேச தொடங்குவது பாச உணர்வை உருவாக்கும் என்றும் அதை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாதாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முங்கண்டிவார், "மக்கள் 'ஜெய் பீம்' அல்லது 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூற விரும்பினால், அல்லது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கும் போது தங்கள் பெற்றோரின் பெயரைக் குறிப்பிட விரும்பினால். அதுவும் சரியாகதான் இருக்கும். அழைப்பைப் பெறும்போது ஹலோ சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
சுதந்திரப் போராட்டத்தின் போது, இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க) போன்ற முழக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது. ஆனால், அது பலரை சுதந்திர இயக்கத்தில் சேர தூண்டியது. இறுதியில், நமக்கு சுதந்திரம் கிடைத்தது. மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்துள்ளார்" என்றார்.