உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் (எஸ்பி) மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை ஞாயிற்றுக்கிழமை மோசமடைந்ததையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியு) மாற்றப்பட்டார்.


82 வயதான முலாயம் சிங், பல நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறார் என்றும் தற்போது டாக்டர் சுஷிலா கட்டாரியாவின் மேற்பார்வையில் உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிங் சிறுநீர் தொற்று நோயாலும் அவதிப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது தந்தையின் உடல்நிலை குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து லக்னோவில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். 


 






இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்து வருவதைப் பற்றி நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். மேலும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.


உத்தரபிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, முலாயம் சிங் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். "உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஊடகங்கள் மூலம் தகவல் கிடைத்தது. அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


நேதாஜி என்று அழைக்கப்படும் முலாயம் சிங், சமாஜ்வாதி கட்சியை நிறுவினார். அவர் தற்போது மக்களவையில் மெயின்புரி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


முன்னதாக, அவரின் மனைவி சாதனா குப்தா இந்த ஆண்டு ஜூலை மாதம் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாதனா சிகிச்சை பெற்று வந்தார்.


முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தா. அவரது முதல் மனைவி மால்தி தேவி 2003 இல் காலமானார். மால்தி தேவிதான், அகிலேஷ் யாதவின் தாயார் ஆவார்.