காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கினார்.
முதல் மூன்று நாட்கள் அவர் கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு கேரளாவில் முடிந்தது. தற்போது ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 30 ம் தேதி முதல் கர்நாடகவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
தசரா திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினமும், நேற்றும் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ராகுல் காந்தி மைசூரில் முகாமிட்டு தங்கிருந்தார். ராகுல் மற்றும் சோனியா காந்தி எச்.டி.கோட்டையில் உள்ள நாகரஒலே வனப்பகுதியில் வனவிலங்குகளை பார்வை விட்டனர். தொடர்ச்சியாக எச்.டி.கோட்டை தாலுகா பேகூர் என்ற கிராமத்தில் உள்ள பீமனகோலி கோவிலில் தசரா பண்டிகையையொட்டி சோனியா காந்தி சாமி தரிசனம் செய்தார். சோனியா காந்தி சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை காங்கிரஸ் பொது செயலாளரும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் படு வேகமாக வைரலானது.
இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு பின்பு இன்று ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்கியபோது அவருடன் அவரது தாயாரும், காங்கிரஸ் கட்சியின் குழுத் தலைவருமான சோனியா காந்தி கர்நாடகா மாநிலம் மாண்டியா என்ற இடத்தில் கலந்து கொண்டார். மேலும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நடைப்பயணம் மேற்கொண்டபோது கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் இளைஞர்கள், தொண்டர்கள் என பலரும் இணைந்து நடைபயணத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ராகுல் காந்தி மொத்தமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,600 கி.மீ தொலைவு இந்திய ஒற்றுமை பாதயாத்திரை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தற்போது வரை சுமார் 600 கி.மீ தூர பயணத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.