உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கு இடையே 6ஆவது நாளாக போர் தாக்குதல் நடைபெற்றது வருகிறது. இதில் இந்திய மாணவர் ஒருவர் கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில்  பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மாணவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்தது. அவருடைய உடலை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வர மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. 


இந்நிலையில் தன்னுடைய மகனின் இறப்பு தொடர்பாக நவீனின் தந்தை ஒரு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “என்னுடைய மகனின் உடலை எப்படியாவது மீண்டும் இந்தியா கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும். இதற்கு எங்களுக்கு அனைத்து கட்சிகளும் உதவி செய்ய வேண்டும். இனிமேலாவது அரசியல் கட்சிகள் மருத்துவ படிப்பிற்கு வழங்கப்படும் நன்கொடைகள் குறித்து சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை. மேலும் சாதி வாரியான இடஒதுக்கீடு இருக்கிறது. எனவே என்னுடைய மகன் 97 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றும் அவனுக்கு இங்கு மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தான் வெளிநாட்டில் என்னுடைய மகனை போல் பலரும் மருத்துவம் படிக்க செல்கின்றனர்” எனக் கூறியுள்ளார். 


 






நவீன் சேகரப்பா ரஷ்யாவில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர் கார்கிவ் நகரில் தங்கியிருந்த போது உணவு வாங்க அங்கு இருந்த அரசு அலுவலகத்திற்கு அருகே சென்றுள்ளார். அப்போது அவர் லயனில் நிற்கும் போது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அந்த தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவருடைய மொபைல் போன் வைத்து இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய இறப்பு தொடர்பாக அங்கு இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க:நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானின் வழக்கில் முறைகேடா?- கசிந்த சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை