உக்ரைன் நாட்டில் கடந்த ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நிலையில், மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் பெருமளவில் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஏர்இந்தியா விமானங்களை அனுப்பி இந்திய மாணவர்களை மீட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியுள்ளார்.
90% மாணவர்கள்..
வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் 90% மாணவர்கள் இந்தியாவில் நடக்கும் மருத்துவத் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதில்லை என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அமைச்சர், மருத்துவப் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களில் 60% பேர் சீனா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் சீனாவிலேயே தங்கிவிடுகின்றனர்.
இந்த நாடுகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான மொத்தக் கட்டணம் ரூ. 35 லட்சமாகும், இதில் ஆறு வருட கல்விச் செலவு, தங்குமிடும், சப்பாட்டு செலவு, பயிற்சி மற்றும் இந்தியா திரும்பியவுடன் ஸ்கிரீனிங் தேர்வில் தேர்ச்சி பெறுதல் ஆகிய மொத்தமும் அடங்கும். இந்தியாவில், முழு எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் ரூ. 45 முதல் 55 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது. இதில் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கல்விக் கட்டணம் மட்டுமே அடங்கும். இதுவே இந்திய மாணவர்கள் வெளியே செல்வதற்கு முக்கியக் காரணம் என்றார்.
இந்திய மாணவர்கள் உக்ரைனுக்கு செல்ல காரணம் என்ன..?
இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டிற்கு சென்று மருத்துவம் பயின்று வருகின்றனர். பொதுவாக, இந்தியாவில் 5 வருடங்கள் மருத்துவம் பயில ஒன்று முதல் ஒன்றரை கோடி செலவாகிறது. ஆனால், உக்ரைன் நாட்டில் மொத்தமாகவே 20 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தால் போதும்.
அதேபோல், இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் ஒரு மிக முக்கிய தேவையாக இருந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மேல்படிப்பு படித்தால் போதும் மருத்துவ படிப்பை படிக்கலாம். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் உலகத்தரமான கல்வியும், செய்முறை பயிற்சியுடன், ஆங்கிலம், உக்ரேனிய மொழிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் வந்து படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்தில் 50 சதவீத சலுகையையும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் வந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 22. 9 % ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டில் என்னதான் இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்றாலும் இந்தியாவில் பயிற்சியை தொடர்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்பது கட்டாயம்.