பிரதமர் மோடி கடவுள் இல்லை என்று தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தரமையா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


பிதமர் மோடி கடவுள் இல்லை - சித்தராமையா காட்டம் 


நேற்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார். மோடியின் ஆசீர்வாதத்தை கர்நாடகா இழந்து விடக்கூடாது என்பதற்காக, கர்நாடகத்தில் தாமரையை வெற்றி பெற செய்து தங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா ஜனநாயகத்தில் வேட்பாளர்களின் தலைவிதியை மக்கள் தீர்மானிப்பதாவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார். யாரையும் ஆசீர்வதிக்க பிரதமர் மோடி கடவுள் இல்லை என்றும் ஜே.பி நட்டாவின் கருத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், அவருக்கு ஜனநாயகம் குறித்த பாடம் தேவைப்படுவதாகவும் சித்தராமைய்யா பதிவிட்டுள்ளார். மேலும் நம் நாட்டில் சர்வதிகாரத்திற்கு இடமில்லை எனவும் அரசியலமைப்பின் படி அனைத்து மாநிலங்களும் சமம் என்றும் பதிவிட்டுள்ளார். 


வரும் மே மாதம் 10-ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. 


பாஜக பிரச்சார வியூகம் 


பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில்,  தேர்தல் பரப்புரையும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  பாஜக தலைமை, நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  அந்த பட்டியலில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, எடியூரப்பா, நலின் குமார் கடீல், பசவராஜ் பொம்மை, ப்ரஹலாத் ஜோஷி, சதானந்த கவுடா, ஈஸ்வரப்பா, கோவிந்த் கர்ஜோல், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ராணி, தர்மேந்திர பிரதான், மன்சுக் பாய் மண்டாவியா ஆகியோருடன் 18வது பெயராக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவரின் பெயரை அடுத்து உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் செளகான், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வ சர்மா உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க 


V.P.Singh Statue : ‘விபி சிங் செய்த சம்பவம், வியந்து பார்த்த இந்தியா' சிலை எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!