முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் கம்பீர சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் அறிவித்ததும் பேரவையில் இருந்த அத்தனை உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். பெருமிதத்தோடு அறிவிக்கிறேன் என முதல்வர் சொன்னது ஒரு வகையில் நன்றி நவிலல். விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங் வெறும் 11 மாதங்களே இந்திய பிரதமர் இருக்கையை அலங்கரித்தாலும் அவரது நினைவுகளும்  செயல்களும் அவர் மறைந்தும் இந்திய மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழர்கள் மனதில் இன்னும் மறையாமல் நிலைகுத்தி நின்றுக்கொண்டிருக்கிறது. என்றும் அவரின் நினைவுகளை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகதான் தமிழ்நாடு அரசு அவருக்கு சிலை எடுக்கவிருக்கிறது.



வி.பி.சிங்


அரச குடும்பத்தில் பிறந்து எளிமையை கடைபிடித்த சிங்


உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அரச குடும்பத்தில் செல்வ செழிப்பிற்கு மத்தியில் பிறந்த வி.பி. சிங், வினோபாபாவேவின் ‘பூமிதான’ இயக்கத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், தன்னுடைய சொந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பூமிதான இயக்கம் மூலம் வாரிக் கொடுத்தார்.  1969ல் நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தவர், 1971 நாடாளுமன்ற தேர்தல் மூலம் எம்.பியானார்.


இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்ததால் வி.பி. சிங்கை தனது அமைச்சரவையில் முதன் முதலாக வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஆக்கினார் அவர். இணை அமைச்சராக இருந்த காலக் கட்டத்திலேயே தனது செயல்பாடுகளால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார் விபிசிங். பின்னர், அவரை அவர் பிறந்த மாநிலமான உத்தரபிரதேசத்திற்கே முதலமைச்சர் ஆக்கினார் இந்திரா காந்தி. அங்கு நடைபெற்ற கொள்ளை, தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க முடியாமல் போனதால், பதவியேற்ற இரண்டே வருடங்களில் தார்மீக பொறுப்பேற்ற தனது முதல்வர் பதவியை துச்சமென தூக்கியெறிந்தார். அப்போதுதான், இந்தியா முழுவதும் வி.பி. சிங் பெயரை உச்சரித்தது. நாளேடுகள் அவரது முடிவை தலைப்பு செய்தியாக்கின.



இந்திரா காந்தியுடன் வி.பி சிங்


மத்திய நிதி அமைச்சர் ஆக்கிய ராஜீவ்காந்தி


இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, விபி சிங்கின் திறமையையும் நேர்மையையும் அறிந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவரையும் தன் அருகே வைத்துக்கொள்ள விரும்பினார். விபி சிங்கிற்கு மிக முக்கியமான பதவியான நிதி அமைச்சர் பொறுப்பை கொடுத்தார் அவர். ஆனால், விபி சிங்கின் நேர்மை ராஜீவ் காந்திக்கே சிக்கலானது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மீதே விபி சிங் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்தார். அவர் பட்டியலில் நடிகர் அமிதாப் பச்சன், திருபாய் அம்பானி ஆகியோர் கூட தப்பவில்லை. ராஜீவ் காந்திக்கு தரப்பட்ட அழுத்தத்தால் விபி சிங்கை பாதுகாப்பு துறை அமைச்சராக மாற்றினார். அப்போதும் பிரச்னை தீரவில்லை. மேலும் மேலும் ராஜீவ்க்கு குடைச்சல் அதிகரித்தது. ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறி விபி சிங்கே நேரடியாக விசாரணையில் இறங்கினார். இந்த முறை அவருக்கு துறை மாற்றத்திற்கு பதில் கிடைத்த பரிசு துறை பறிப்பு. ஆவேசமடைந்த விபி சிங் எப்படி முதல்வர் பதவியை தூக்கி எறிந்தாரோ அதே மாதிரி தனது எம்.பி. பதவியையும் தூக்கி எறிந்தார் கூடவே காங்கிரஸ் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியையும்தான்.



முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் விபி சிங்


7வது பிரதமரான விபி சிங்


பின்னர் காங்கிரஸ் அல்லாத கட்சி இந்தியாவை ஆளவேண்டும் என்று நினைத்து, ஜனமோர்ச்ச என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், ஜனதா, லோக் தளம், மதசார்பற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை நிறுவி அதற்கு தலைவராக இருந்தார். 1989 மக்களவை தேர்தலில் விபி சிங் தலைமையிலான ஜனதா தள கட்சி மாநில கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி சார்பில் விபி சிங் இந்தியாவின் 7வது பிரதமராக பதவியேற்றார்.


மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி சாதனை


 பதவியேற்றதும் அவர் செய்த முக்கிய சாதனை மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியது. அதுதான், இன்றளவும் வி.பி. சிங் பெயரை பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் தங்கள் நெஞ்சில் தாங்கி நிற்பதற்கு காரணம். இன்று தமிழ்நாடு அரசு அவருக்கு கம்பீர சிலை நிறுவப்போவதாக அறிவித்துள்ளதற்கு மிக முக்கிய காரணம் அவர் ஏற்படுத்தி தந்த இட ஒதுக்கீடு.


பீகார் முதல்வராக சில காலம் இருந்த வழக்கறிஞர் பிபி மண்டல் தலைமையில் 1979ல் அப்போதைய உள்துறை அமைச்சர் சரண் சிங் பரிந்துரையில் அமைக்கப்பட்டதுதான் மண்டல் கமிஷன். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த முடிவை அந்த ஆணையம் எடுத்து அறிக்கையை சமர்பித்தது. பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்த சமூகத்தைஅ சேர்ந்தவர்கள் அரசு பதவிகளில் மிக குறைவாகவே இருந்தனர் என்றும் அவர்களை அரசு உயர் பதவிகளில் பிரதிநிதித்துவப்படுத்த வழி வகை ஏற்படுத்தும் வகையில் அட்டவணை சமூகங்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஏற்கனவே இருந்த 22.5% உடன் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்காக 27% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று மண்டல் ஆணையம் பரிந்துரை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது.


தைரியமான முடிவு எடுத்த விபி சிங்


ஆனால், மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து பிரதமரான ராஜீவ் காந்தி மண்டல் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட்டார். பின்னர், பிரதமராக பொறுப்பேற்ற வி.பி சிங் தான் இதன் முக்கியத்துவத்தை அறிந்து எதிர்ப்புகள் வந்தபோதும் மண்டல் கமிஷன பரிந்துரைகளை தைரியமாக செயல்படுத்தினார்.     


இந்த முடிவிற்காக இட ஒதுக்கிட்டை வலியுறுத்தும் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் விபி சிங்கை கொண்டாடின. இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு விளக்கேற்றிய ஒரு ஆபத்பாந்தவனாகவே விபி சிங்கை அந்த மக்கள் பார்த்தனர். அதனுடைய நீட்சியாக நன்றிக்காகதான் தற்போது தமிழ்நாட்டில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.