ஹரியானா மாநில அம்பாலா தொகுதி பாஜக எம்.பி ரத்தன் லால் கட்டாரியா உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் மத்திய அமைச்சரும், அம்பாலா எம்.பி.யுமான ரத்தன் லால் கட்டாரியா வியாழக்கிழமை காலை காலமானார். அவரது மறைவுக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அம்பாலா எம்.பியுமான ஸ்ரீ ரத்தன் லால் கட்டாரியாவின் மறைவு குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சமூக நலனுக்காகவும், ஹரியானா மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர் எப்போதும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
அவரது மறைவு அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த இக்கட்டான நேரத்தில் இறந்த ஆன்மாவிற்கு இறைவன் அவரது திருவடிகளில் இடம் தந்து, குடும்பத்திற்கு வலிமை அளிக்கட்டும். ஓம் சாந்தி!” என பதிவிட்டு இருந்தார்.
துணை முதல்வர் சவுதாலாவும் இரங்கல்:
ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவும் கட்டாரியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், “ஹரியானாவின் மூத்த தலைவர் ரத்தன்லால் கட்டாரியா, அம்பாலாவின் பாஜக எம்.பி.யின் திடீர் மரணம் குறித்த செய்தியைக் கேட்டு நான் வருத்தமடைந்தேன். இது மாநில அரசியலுக்கு பெரும் இழப்பு. அன்னாரது ஆன்மா சாந்தியடைய அவரது திருவடிகளில் இடம் தந்து இந்த துயரத்தை தாங்கும் சக்தியை குடும்பத்தினருக்கு இறைவன் வழங்குவானாக. பணிவான அஞ்சலி.” என குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி ட்வீட்:
நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியாவின் மறைவு வேதனை அளிக்கிறது. பொது சேவை மற்றும் சமூக நீதிக்கான அவரது சிறந்த பங்களிப்பிற்காக அவர் நினைவுகூரப்படுவார். ஹரியானாவில் பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.