சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 


தற்போது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து புவி அறிவியல் அமைச்சராக நியமிக்கப்பட்ட கிரண் டிஜிஜூ அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அருணாச்சல மேற்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 






நீதித்துறையில் தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக்கு பின், அமைச்சரவை மாற்றத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த மாற்றம் குறித்து ஏபிபி செய்தி நிறுவனம் கிரண் ரிஜிஜூயை தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர், “ வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 


ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்த சட்டத்துறை கடந்த 2021 ஜூலை மாதம் கிரண் ரிஜிஜூவிடம் வழங்கப்பட்டது. ரிஜிஜூ சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறையுடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் அடிக்கடி தலைப்பு செய்திகளாக வெடித்தது. தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மீது பல்வேறு விமர்சனங்களை பகிரங்கமாக ரிஜிஜூ முன்வைத்தார். இதன் காரணமாகவே அரசின் மிக உயர்ந்த பதவியில் இருந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மதிப்பு குறைவிலான புவி அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 


அர்ஜூன் ராம் மேக்வால்:


தற்போது சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன் ராம் மேக்வால் ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் பாஜகவின் மிகப்பெரிய தலித் முகங்களில் இவரும் ஒருவர். மிகவும் எளிய முகமாக அறியப்படுகிறார். இவரது எளிமையை பிரதிபலிக்கும் விதமாக அடிக்கடி சைக்கிளிலும் வலம் வருவார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இவருக்கு சட்ட அமைச்சகம் போன்ற முக்கிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது அரசியல் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.