கர்நாடகா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் திடீர் திருப்பமாக ஷிவமோக்கா மாவட்டத்தில் பாஜவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல்
கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு 2023 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் மே 10 ஆம் தேதி நடக்கவுள்ளது. தென்னிந்தியாவில் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சி செய்து வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் முடிவில் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் எப்படியாவது அங்கு மீண்டும் வெற்றி பெற ஆளுங்கட்சியான பா.ஜ.க. முழு முயற்சியோடு களமிறங்கியுள்ளது.
அதேசமயம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் , முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழ தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கிடையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விலகிய ஈஸ்வரப்பா
இதனிடையே நேற்றைய தினம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கர்நாடக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் “உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுகிறேன். ஆக, எந்த தொகுதிக்கும் என்னுடைய பெயரை பரீசிலிக்க வேண்டாம். எனக்கு மாநில தலைவராக, அமைச்சராக, துணை முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பாஜகவுக்கு நன்றி” என தெரிவித்திருந்தார்.
இது பாஜக மேலிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் கர்நாடகாவை பொறுத்தவரை இதுவரை பாஜக தனி பெரும்பான்மையுடன் இங்கு ஆட்சி அமைக்கவில்லை. எனவே வரும் தேர்தலில் பெருவாரியான வெற்றிப் பெற ஆட்சி அமைக்க பாடுபடுவேன் எனவும் ஈஸ்வரப்பா தெரிவித்திருந்தார்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
இதற்கிடையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் 52 பேர் புதிதாக களம் காண்கின்றனர். இதில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பாரம்பரியமிக்க ஷிக்கான் தொகுதியில் போட்டியிடுகிறார்.முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாஜக நிர்வாகிகள் ராஜினாமா
இதனிடையே கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், பாஜக சீட் வழங்கப்படவில்லை என மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் ஈஸ்வரப்பாவுக்கு ஆதரவாக ஷிவமோக்காவில் உள்ள பாஜகவைச் சேர்ந்த மேயர் மற்றும் துணைமேயர் உட்பட 19 மாநகராட்சி உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் லட்சுமண் சவாடி பாஜகவில் இருந்து விலகினார்.