கொரோனா தொற்று தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 90 நாட்களில் 6-7 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்று பரவல்:


கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் உலக அளவில் பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியது. கொரோனா பரவியதையடுத்து உலகம் முழுவதும் திகைத்து முடங்கியது. உலகமே ஊரடங்கு, தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என கொரோனாவுடன் போராடத் தொடங்கியது. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஓமிக்ரான் என கொரோனா நிறைய திரிபுகளாக உருமாறியுள்ளது. இவற்றில் டெல்டா திரிபு தான் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனாவில் நிறைய உயிர்கள் பலியாகவும் டெல்டா திரிபு தான் காரணமாக இருந்தது. கொரோனா வைரஸின் திரிபு வைரஸ் உருமாறி வருவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 


புதிய விதிமுறைகள் என்னென்ன?


கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளவர்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.அறிகுறிகள் கண்டுப்பிடிக்கப்படும் நாள் முதல் இதை கடைப்பிடிக்க வேண்டும். 


ஆண்டிஜென் ராப்ட் டெஸ்ட் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு 10 நாட்கள் காத்திருக்காமல், உடனடியாக வீடு திரும்பலாம். 


அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை 5 நாட்கள் தனிமைப்படுத்துதல் கண்காணிக்க வேண்டும். 


பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.  


நாசி வழி தடுப்பு மருத்தான ‘Paxlovid’ நிறுவனத்தின் ’ nirmatrelvir-ritonavir ’ என்ற பூஸ்டர் டோஸ்சை செலுத்தவும் பரிந்துரைத்துள்ளது.


கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?


மூன்று காரணங்கள்


இதுகுறித்து பேசிய பெங்களூர் கன்னிங்ஹாம் சாலையில் உள்ள, ஃபோர்டிஸ் மருத்துவமனை, உள் மருத்துவ மூத்த ஆலோசகர், டாக்டர் ஆதித்யா எஸ் சௌதி, “இந்தியாவில் கோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதற்குப் பின்னால் பல காரணிகள் உள்ளன. அதில் முதன்மையாக வைரஸின் புதிய மாறுபாடு காரணமாகும், எனவே, மக்கள் இந்த வகையான புதிய மாறுபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா கட்டுப்படுகளில் தளர்வு மற்றும் காற்றில் ஏற்படும் இரண்டாம் நிலை தொற்றுகளும் சாத்தியமான காரணங்களாகும்," என்றார்.


கொரோனா தொற்றும் தடுக்கும் வழிமுறைகளும்  


உலக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இப்போது, கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டுமின்றி,  பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


* அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். சானிட்டைஸர் வைத்திருபது கட்டாயமாகும். 


*  அனைவரும் தனி மனித இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். 


* சுவாச வழிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். 


* வளாகங்கள் மற்றும் பேருந்துகளை முறையாகச் சுத்தப்படுத்தி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 


* திறந்த இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட வேண்டும். 


* முகக் கவசங்கள், பிற உறைகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 


* கோடைக்காலம் என்பதால் வெப்ப அதிக்கரித்துள்ளது. அதோடு, பருவ கால தொற்று நோய்களும் அதிகம் உள்ளதால் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும்.


* உடற்பயிற்சி, சுவாச பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 


இரண்டு ஆண்டுகால பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, கொரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொண்ட பாடங்களும் நமக்குண்டு. அதற்கேற்றவாறு கொரோனா வழிமுறை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பிறகு, மக்கள் பொதுஇடங்களில் முக கவசம் அணிந்து செல்வதையும் காண முடிகிறது.