புனேவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சியின் சச்சின் போஸ்லே, பாஜக தொண்டர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இடைத்தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.


கஸ்பா பெத் மற்றும் சின்ச்வாட் இடைத்தேர்தல்


கஸ்பா பெத் மற்றும் சின்ச்வாட் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 26 ஆம் தேதியும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக எம்எல்ஏக்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கஸ்பா பெத் எம்எல்ஏ முக்தா திலக் கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி இறந்தார், சின்ச்வாட் எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் ஜனவரி 3 ஆம் தேதி காலமானார்.



பலத்த பாதுகாப்பு


கஸ்பா பெத்தில் 510 வாக்குச்சாவடி மையங்களும், சின்ச்வாட்டில் 270 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. வாக்குப்பதிவுக்கு முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விரிவான திட்டம் அந்தந்த காவல் பிரிவுகள் மற்றும் மத்திய முகமைகளுடன் ஒருங்கிணைந்து மாநில தேர்தல் ஆணையத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நடத்தப்படும் தேர்தலில் ஏற்கனவே அடிதடி, சண்டைகள் தொடங்கிவிட்டன.


தொடர்புடைய செய்திகள்: “கன்னத்தில் அறைந்ததால் கோபம் வந்துவிட்டது” - கணவரை 7 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி!


போஸ்லே மீது தாக்குதல்


என்சிபி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், என்சிபி தலைவர் அஜித் பவார், சிவசேனா தலைவர் (யுபிடி) ஆதித்ய தாக்ரே உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மூத்த தலைவர்களும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பிரச்சாரத்தில் இருந்த போஸ்லே தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலவ் சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



நாகரிக அரசியலின் அவசியம்


போஸ்லே மீதான தாக்குதல், பிரச்சாரத்தின் போது அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுகிறது. இந்திய அரசியலில் வன்முறையும் ஆக்கிரமிப்பும் சர்வ சாதாரணமாகிவிட்டன, சமீப ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. குறிப்பாக தேர்தல் காலங்களில் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று பல தரப்பில் இருந்து கருத்துகள் வருகின்றன. வன்முறை மற்றும் அச்சுறுத்தல் இல்லாத, மிகவும் நாகரீகமான மற்றும் மரியாதையான அரசியல் உரையாடலின் அவசியத்தையும் இந்த சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.