தன்னை கன்னத்தில் அறைந்த கணவனை மனைவி குத்திக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.


மது பழக்கத்தால் இந்திய அளவில் நிமிடத்துக்கு 6 பேர் இறக்கின்றனர் என்றும், இதில் 18 சதவீதம் பேர் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தவிர, இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் போதைக்கு அடிமை ஆகும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 


இந்தச் சம்பவம் மது போதையால் நடந்த விபரீத சம்பவமாகவே உள்ளது. மது போதையால் அந்த நபர் மட்டுமல்ல குடும்ப உறுப்பினர்களும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று. போதைப் பழக்கம் அந்த நபரின் உயிரைப் பறித்தது, மனைவியை கொலைகாரி ஆக்கியது, பிள்ளைகள் ஆதரவற்றவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.


அஸ்ஸாம் மாநிலம் சில்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 25 பெண் ஒருவர் அவரது 30 வயது கணவரை செவ்வாய்க் கிழமை இரவு குத்திக் கொலை செய்துள்ளார். குடிபோதையில் வீடு திரும்பி தன்னை முகத்தில் அறைந்ததால் அவர் ஆவேசமடைந்து கொலை செய்துள்ளார்.


கத்திக் குத்தில் காயமடைந்த அவரை சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் காயமடைந்து ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே அவர் அழைத்து வரப்பட்டார். வீட்டிலேயே நிறைய ரத்தம் இழந்துவிட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அந்த நபரின் உடலில் 7 இடங்களில் கத்திக் குத்து இருந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவரின் மனைவியை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டார். குடிபோதையில் வந்து தகராறு செய்துவிட்டு அடித்துத் துன்புறுத்தினார். கன்னத்தில் அறைந்தது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் நான் அவரை கொலை செய்தேன் என்றார்.


இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சில்சார் மாவட்டம் மெஹர்பூரில் கபியுரா பகுதியில் இவர்கள் வீடு உள்ளது. வாடகை வீடு தான். தம்பதியர் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வர் என்றும் கொலையான நபர் குடிகாரர் என்றும் அக்கம் பக்கத்தினர் உறுதி செய்தனர். "எப்போதுமே அவர்கள் வீட்டிலிருந்து இரவில் கூச்சல் சத்தம் இருக்கும். நேற்றும் அப்படித் தான் என நினைத்தோம். ஆனால் சில மணி நேரத்தில் அங்கிருந்து அந்த நபர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் தூக்கிச் செல்லப்பட்டார்" என்றனர்.


பெண்களுக்கெதிரான குற்றங்கள்


தேசிய குற்ற ஆவண புள்ளி விவரத்தின் படி, 2021 இல் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கெதிரான குற்றங்களில் பதிவாகியுள்ளன. இது 2020ஆம் ஆண்டை விட 15.3% அதிகம். இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், பெண்களுக்கெதிரான மொத்த வழக்குகளில் 31.8% கணவர்கள் அல்லது நன்கு தெரிந்த நபர்களால் இழைக்கப்பட்டவையே என்று தெரிகிறது.