செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா கூறியுள்ளார்.
புற்றுநோய் மனித குலத்தின் சாபம் என்று பற்பல ஆண்டுகளாக மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து தோல்வியுற்றவர்கள் பலர் சொல்லிவிட்டு தேடுதலை கைவிட்டவர்கள் கூறும் வார்த்தை. தற்போது ஏதேதோ சிகிச்சைகள் வந்துவிட்டாலும் முற்றிலுமாக தீர்க்கக்கூடிய மருந்து மனிதர்களிடம் இல்லை என்பதே நிதர்சனம்.
புற்றுநோய் தடுப்பூசி
ஆனால் புற்றுநோயில் உள்ள சில வகைகள் குணப்படுத்தக் கூடியதுதான். அதிலும் தடுப்பூசி உள்ள ஒன்றே ஒன்று கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்தான். அது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் அது விற்கும் விலைக்கு நடுத்தர மக்களே அதனை போட்டுக்கொள்ள முடியாதபடி உள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடையே பொதுவாக காணப்படும் புற்றுநோயில் ஒன்றாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளது. கருப்பை வாய் என்பது கருப்பையின் கீழ் பகுதி, இது கருப்பையை யோனியுடன் இணைக்கிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை வளரும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் காணப்படுகின்றன.
இந்தியாவில் பாதிப்பு விகிதம்
இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 15 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களிடையே அடிக்கடி ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிப்பு
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குவாட்ரிவலன்ட் ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை (qHPV) தயாரிப்பதற்கான சந்தை அங்கீகாரத்தை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) நேற்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு (SII) வழங்கியுள்ளார்.
ட்விட்டரில் நன்றி
மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பூனவல்லா ஒரு ட்வீட்டில், “முதல்முறையாக பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க இந்திய HPV தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. அது மலிவு விலையில் எல்லா தரப்பட்ட மக்களும் அணுகும்படி சந்தைப்படுத்தப்படும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதற்கான வேலைகளை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறோம், இதற்கு அனுமதி வழங்கியதற்காக #DCGI @MoHFW_INDIA க்கு நன்றி." என்று எழுதி இருந்தார்.
DCGI ஒப்புதல்
ஜூன் 15 அன்று CDSCOவின் கொரோனா தொடர்பான பாட நிபுணர் குழுவின் (SEC) பரிந்துரையைத் தொடர்ந்து SII இன் புற்றுநோய் எதிர்ப்பு தடுப்பூசி மருந்துக் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் 2 ஆம் கட்டத்திற்குப் பிறகு qHPV இன் சந்தை அங்கீகாரம் கோரி DCGI க்கு விண்ணப்பித்திருந்தது. பயோடெக்னாலஜி துறையின் ஆதரவுடன் மருத்துவ பரிசோதனை முடிந்து இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்