சிபிஎஸ்இ 2-ம் பருவப் பொதுத் தேர்வு முடிவுகள் மேலும் தள்ளிப் போகலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கிடையே தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 2ஆவது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிவித்தது.


2 பருவத் தேர்வுகள்


புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது.









புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு 2021-22 கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. 



ஏப்ரல் - மே மாதத்தில் பொதுத் தேர்வுகள்


அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 17ஆம் தேதி வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது.


இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை உயர் கல்வி நிறுவனங்களின் ஆணையமான யுஜிசி வெளியிட்டுள்ளது.


 ஜூலையில் முக்கியத் தேர்வுகள்


உயர் கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஒரே மாதத்தில், ஜூலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதனால் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண