நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அறிக்கையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் உள்ளிட்ட குற்றவாளிகளிடமிருந்து பலமுறை கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. 


குற்றம் சாட்டப்பட்ட 35 பேருக்கு எதிராக சிறப்பு போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம் (என்டிபிஎஸ்) நீதிமன்றத்தில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகையை மத்திய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் நேற்று தாக்கல் செய்தது. 




சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த மார்ச் 2020 முதல் டிசம்பர் வரை ஒருவராகவோ அல்லது குழுக்களாகவோ இணைந்து பாலிவுட் மற்றும் உயர் சமூகத்தில் இருக்கும் நபர்களிடம் போதைப்பொருட்களை வாங்க, விற்க, விநியோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். 


குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்ததாகவும், மும்பை பெருநகரப் பகுதிக்குள் செல்லுபடியாகும் உரிமம், அனுமதி அல்லது அங்கீகாரம் இல்லாமல் கஞ்சா, சரஸ், கோகோயின், சைக்கோட்ரோபிக் பொருட்கள் மற்றும் பிற போதை மருந்துகளை உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


எனவே, NDPS சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ், பிரிவுகள் 27 மற்றும் 27A (சட்டவிரோத போக்குவரத்திற்கு நிதியளித்தல் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல்) 28 (குற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகளுக்கான தண்டனை), 29 (குற்றச் சதிக்கு உடந்தையாக இருப்பவர் என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


குற்றம் சாட்டப்பட்ட சாமுவேல் மிராண்டா, ஷோயிக், திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து ரியா சக்ரோவர்த்தி பல கஞ்சா டெலிவரிகளை பெற்று, அந்த டெலிவரிகளை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் வழங்கியுள்ளார் என்ற அதிர்ச்சிகர தகவலும் கிடைத்துள்ளது. 


இதன்மூலம், கடந்த மார்ச் 2020 முதல் ரியா சக்ரவர்த்தி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு வழங்கியது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரியாவின் சகோதரர் ஷோக் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளதாகவும், சக குற்றவாளிகளிடமிருந்து போதைப்பொருட்களை பெற்று ராஜ்புத்திடம் வழங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்குக்கான விசாரணை தொடங்குகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் குறித்து நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும்.




இதுவரை, தர்மடிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகத் தயாரிப்பாளர் க்ஷிதிஜ் பிரசாத் உட்பட 4 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். சிறப்பு நீதிபதி விஜி ரகுவன்ஷி, போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகின்ற ஜூலை 27ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தார்.


ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் வழக்கில் 2020 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து மும்பை உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றார். ரியாவைத் தவிர, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி மற்றும் பலர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலோர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். 


கடந்த ஜூன் 14, 2020 அன்று சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததைத் தொடர்ந்து திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி என்சிபி விசாரணையை தொடங்கி தற்போது வரை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை பல முக்கிய பிரபலங்கள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.