Chief Election Commissioner: தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரின் பதவிக்காலம், வரும் பிப்ரவரி 18ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.


தேடுதல் குழு அமைத்த மத்திய அரசு


இந்திய தேர்தல் ஆணையத்தின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிதி மற்றும் பணியாளர் & பயிற்சி துறை செயலாளர்கள் இரண்டு பேரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது செயலாளர் நிலை அதிகாரிகள் 5 பேரை தேர்வு செய்து, அவர்களை அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கலாம் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கும். அதனை பிரதமர், கேபினட் அமைச்சர் மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு பரிசீலித்து, அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும்.


புதிய நடைமுறை:


இதுநாள் வரையில், பதவியில் இருக்கும் தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஓய்வு பெற்றால், அவரை தொடர்ந்து பதவியில் இருக்கும் மிக மூத்த தேர்தல் ஆணையர் (EC) தலைமைத் தேர்தல் ஆணையராக (CEC) உயர்த்தப்படுவார். ஆனால், கடந்த ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமனங்கள் குறித்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, CEC மற்றும் EC களாக நியமனம் செய்வதற்கான குழுவின் பரிசீலனைக்காக ஒரு தேடல் குழு ஐந்து செயலாளர்-நிலை அதிகாரிகளின் பெயர்களை பட்டியலிடட்டு பரிந்துரைக்கும். புதிய சட்டத்தின்படி, தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கடந்த ஆண்டு அனுப் சந்திராவின் ஓய்வு மற்றும் அருண் கோயலின் பதவி விலகலால் ஏற்பட்ட தேர்தல் ஆணையர் காலியிடங்களை நிரப்பவும், புதிய சட்ட நடைமுறை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதையும் படியுங்கள்: FHI Rankings: ”நிதி ஆரோக்கியம்” போட்டுக் கொடுத்த மத்திய அரசு, டாப் 10ல் கூட இல்லாத தமிழ்நாடு, அப்ப வளர்ச்சி?


புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார்?


தற்போதைய தலைமை ஆணையரான ராஜீவ் குமார், வரும் பிப்ரவரி 18ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அவருக்கு வயது 65. இவர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பலமுறை குற்றம்சாட்டினாலும், தான் நடுநிலையாகவே செயல்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். இவரை தொடர்ந்து, மூத்த தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இருக்கிறார். இவரது பதவிக்காலமும் ஜனவரி 26, 2029 வரை உள்ளது. ஆனால், அடுத்த தலைமை தேர்தல் அதிகாரியாக அவர் தேர்வாவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.