Husband Suicide: மனைவிக்கு எனது உயிர் தான் வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, கணவர் தற்கொலை செய்துள்ளார்.
கணவர் தற்கொலை:
கர்நாடாக மாநிலம் ஹுப்பள்ளியில் பீட்டர் கொல்லப்பள்ளி எனும் நபர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். அதில் தனது மரணத்திற்கு காரணம் எனது மனைவியின் கொடுமையே என குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடிதத்தில் தனக்கும் தனது மனைவிக்கும் கடந்த மூன்று மாதங்களாக குடும்பத் தகராறு இருப்பதாக பீட்டர் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தைக்கு பீட்டர் எழுதிய கடிதத்தில், "அப்பா, மன்னிக்கவும். என் மனைவி பிங்கி என்னைக் கொல்கிறாள், அவள் என் மரணத்தை விரும்புகிறாள். என் மனைவியின் சித்திரவதையால் நான் இறந்து கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
”ரூ.20 லட்சம் இழப்பீடு”
பீட்டரின் சகோதரர் ஜோயல், ஞாய்றுக்கிழமையான நேற்று தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பியபோது, தனது சகோதரர் இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து கண்டெடுத்த மரண குறிப்பில், "பிங்கி என்ற புனைப்பெயர் கொண்ட தனது மனைவி ஃபீபே, தான் இறக்க விரும்புவதாக பீட்டர் குறிப்பிட்டுள்ளார்" என்று ஜோயல் கூறினார்.மேலும், "அப்பா என்னை மன்னிக்கவும், அண்ணா தயவுசெய்து பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்" என்றும் பீட்டர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜோயல் மற்றும் ஃபீபேக்கு திருமணமான நிலையில், குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என, பீட்டரை அவரது மனைவி நிர்பந்தித்து வந்ததால் தனது சகோதரர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக ஜோயல் தெரிவித்துள்ளார்.
வேலையை இழந்த மகன்:
மகன் பீட்டர் உயிரிழந்தது தொடர்பாக பேசிய ஒபய்யா, “மனைவியின் சித்திரவதையால் என் மகன் இறந்து போனான். இதைத் தெரிவித்து கடிதமும் எழுதியுள்ளான். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவள் தன் தாய் வீட்டில் தங்குவதற்காக அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறுவாள், நீ இறந்தாலும் உன்னை பார்க்க நான் வரமாட்டேன் என்று எனது மகணிடம் அடிக்கடி கூறுவாள். விவாகரத்து வழக்கில் எனது மகனின் மனைவியின் சகோதரர் ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளார். அலுவலக கூட்டத்தின் போதும் மனைவி மோதலில் ஈடுபட்டதால் தான், பீட்டரை அவரது முதலாளி பணிநீக்கம் செய்தார்” என வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்குப்பதிவு:
தற்கொலைக்குத் தூண்டுவது தொடர்பான பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), 2023ன் பிரிவு 108ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர், அசோக் நகர் போலீசார் இறப்பு குறிப்பு மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்து அடுத்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.