FHI Rankings: மாநிலங்களின் நிதி ஆரோக்கியம் தொடர்பான நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கை, தமிழ்நாடு மக்களுக்கு அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது.
நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கை
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் அதன் மாநிலங்களின் நிதி ஆரோக்கியத்தை பெரிதும் நம்பியுள்ளது. காரணம் நாட்டின் பொதுச் செலவில் மூன்றில் இரண்டு பங்கை மாநிலங்கள் தான் நிர்வகிக்கின்றன மற்றும் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கை பங்களிக்கின்றன. இந்நிலையில், மாநிலங்களின் நிதி உத்திகளை மதிப்பிடுவதற்கும், வழிகாட்டுவதற்குமான, NITI ஆயோக்கின் நிதி சுகாதாரக் குறியீடு (FHI) ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அமைப்பானது ஐந்து முக்கியமான பரிமாணங்களில் மாநிலங்களை மதிப்பீடு செய்கிறது. அவை செலவுத் தரம், வருவாய் திரட்டல், நிதி விவேகம், கடன் குறியீடு மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகும். சீர்திருத்தத்திற்கான பகுதிகளை அடையாளம் கண்டு, நாடு முழுவதும் பயனுள்ள நிதி நடைமுறைகளை மேம்படுத்துவதே இதன் இலக்காகும்.
FHI ஆய்வு செய்வது எப்படி?
நிதி சுகாதாரக் குறியீடு, ஐந்து அம்சங்களை கொண்டு கணக்கிடப்படுகிறது. அவை,
1. செலவினங்களின் தரம் : வளர்ச்சிக்கான செலவு மற்றும் மூலதன முதலீட்டின் விகிதத்தை மொத்த செலவினங்களுக்கு அளவிடுகிறது. இது நீண்ட கால வளர்ச்சியில் மாநிலங்களின் கவனத்தை குறிக்கிறது.
2. வருவாய் திரட்டல் : மாநிலங்களின் பொருளாதார வெளியீடு மற்றும் செலவினங்களுக்கு ஏற்ப சொந்த வருவாயை உருவாக்கும் திறனைப் பிரதிபலிக்கிறது.
3. நிதி விவேகம் : வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை மதிப்பிடுகிறது, கடன் வாங்குவதை நம்பியிருக்கும் அளவை எடுத்துக்காட்டுகிறது.
4. கடன் குறியீடானது : மாநிலங்களின் கடன் சுமையை மதிப்பிடுவதற்கு வட்டி செலுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள கடன்கள் போன்ற கடன் தொடர்பான அளவீடுகளைக் கண்காணிக்கிறது.
5. கடன் நிலைத்தன்மை : நிதி ஆரோக்கியத்தைக் குறிக்கும் நேர்மறையான வேறுபாட்டுடன், பொருளாதார வளர்ச்சி மற்றும் கடன் சேவை தேவைகளுக்கு இடையே உள்ள சமநிலையை ஆராய்கிறது
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
ஆய்வறிக்கையின்படி, கடன் மேலாண்மை மற்றும் பயனுள்ள வருவாய் திரட்டல் ஆகியவற்றில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக ஒடிசா விளங்குகிறது. 2022-23 நிதியாண்டில் நிதி ரீதியாக மிகவும் நிலையான மாநிலமாகவும் தேர்வாகியுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் சமநிலையான நிதி உத்திகளை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக கோவா வருவாய் திரட்டும் செயல்திறனில் முன்னணியில் உள்ளது. அதேநேரம், அதிக கடன் அளவுகள் மற்றும் குறைந்த வருவாய் உருவாக்கம் ஆகிய காரணங்களால், 2022-23 நிதியாண்டில் பஞ்சாப், கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமான நிதி அழுத்தத்தை எதிர்கொண்டதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிலை என்ன?
2022-23 FHI, கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் (CAG) தரவுகளின் அடிப்படையில், 18 முக்கிய இந்திய மாநிலங்களின் நிதி செயல்திறனை ஆய்வு செய்தது. 67.8 மதிப்பெண்களுடன் ஒடிசா முதலிடத்திலும், சத்தீஸ்கர் (55.2), கோவா (53.6) ஆகிய மாநிலங்களும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாடு முதல் 10 இடங்களில் கூட இல்லாமல், 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
செலவினங்களின் தரத்தில் 32 புள்ளிகளையும், வருவாய் திரட்டலில் 41.2 புள்ளிகளையும், நிதி விவேகத்தில் 25.8 புள்ளிகளையும், கடன் குறியீட்டில் 36 புள்ளிகளையும், கடன் நிலைத்தன்மையில் 11.1 புள்ளிகளையும் பெற்றுள்ளது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக இருந்தாலும், தமிழ்நாட்டின் நிதி ஆரோக்கியம் பல சிறிய மாநிலங்களை விட பலவீனமாக இருப்பதை இந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.