கடந்த இரண்டு நாட்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் பாலியா மாவட்டத்தில், வெயிலின் கோர தாக்குதல் காரணமாக 34 பேர் உயிரிழந்ததாகவும், இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், அவர்களின் மரணத்திற்கு வெப்பம் காரணமாக அதிகரிக்கக்கூடிய பிற நோய்கள்தான் காரணம் என்றும் அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர். 


கொளுத்தும் வெயில்


பொதுவாகவே பலரும் இந்த ஆண்டு அடிக்கும் வெயிலை தாள முடியவில்லை என்று புலம்புவதும், சாலையோரங்களில் முழுவதும் குளிர் பானக்கடைகள், இளநீர் கடைகள், தர்பூசணி, கரும்பு ஜுஸ், கிர்னி ஜுஸ் கடைகளின் கூட்டம் நிரம்பி வழிவதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். சாதாரணமாக வெயிலை தாங்கிக்கொள்ளக் கூடிய பலரும் இந்த வெயிலை கண்டு அஞ்சுவது இந்த ஆண்டு புதிதாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு வெயில் சுட்டெரித்துக் கொண்டுள்ளது. அதோடு ஜூன் மாத சராசரி வெப்ப நிலையை விட இந்த ஆண்டு உலகம் முழுவதுமே 1.5°C அதிகம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் விஞ்ஞானிகள் வியாழக்கிழமை எச்சரித்தனர். இந்நிலையில் உ.பி. மாநிலத்தில் பலர் வெயிலுக்கு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



உ.பி.யில் 34 பேர் உயிரிழப்பு


பாலியா தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) டாக்டர் ஜெயந்த் குமார் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “வெப்பம் அதிகரித்துள்ளது. ஆனால் வெப்ப வாதத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல் இல்லை. சமூக ஊடகங்களில், பாலியா மாவட்ட மருத்துவமனையில், இரண்டு நாட்களில் 34 இறப்புகள் நடந்ததாக அறிந்தேன். வியாழக்கிழமை, 23 இறப்புகளும், வெள்ளிக்கிழமை, 11 இறப்புகளும் நிகழ்ந்தன. பின்னர் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் உட்பட அனைத்து மருத்துவர்களிடமும் பேசினேன்," என்றார்.


தொடர்புடைய செய்திகள்: Vijay Makkal Iyakkam: ” தளபதி விஜய் கல்வி விருது” தடபுடலான ஏற்பாடு..! விழா மேடையில் யார் ஃபோட்டோ தெரியுமா?


இறந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்


மேலும் பேசிய அவர், "இந்த இறப்புகளில் பெரும்பாலானவை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கனவே இருந்த நோய்கள், வெயிலின் தாக்கம் காரணமாக மோசமடைந்ததால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன… வயதான காலத்தில், மக்கள் வெப்பத்தைத் தாங்க முடியாது. இந்த மரணங்கள் அதன் காரணமாக இருக்கலாம். நாங்கள் விசாரித்து வருகிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.



வெப்ப பக்கவாத சிகிச்சை செய்ய தயார் நிலை


பாலியா மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் திவாகர் சிங் கூறுகையில், வெப்பம் காரணமாக, நோயாளிகள் ஏற்கனவே அவதிப்பட்டு வந்த உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். தேவைப்படும்போது வெப்ப பக்கவாதத்திற்கான சிகிச்சையை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.


இந்த மாதம் பதிவாகியுள்ள வெப்பநிலை 2015 பாரிஸ் உடன்படிக்கையில் குறைந்த வரம்பாக அமைக்கப்பட்டுள்ள வெப்ப வரம்பு குறியீடுதான் என்றாலும், அப்போது அந்த வெப்பநிலை அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் ஏற்படும் மாற்றம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 2030-களின் முற்பகுதி வரை, அதாவது 2025 வரை இந்த வரம்பை வெப்பநிலை மீறாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் முன்பாகவே அதனை தாண்டி சென்றிருப்பது சூழலியல் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.