தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.


மாணவர்களுக்கு விருது:


நடிகர் விஜயின் அரசியல் கவனம் எல்லாம் இளைஞர்களை குறிவைத்து இருக்கும் நிலையில், வருங்கால தலைமுறையினரையும்  ஈர்க்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, அண்மையில் வெளியான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற உள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.  


ஏற்பாடுகள் தீவிரம்:


நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் செண்டரில் விருது வழங்கும் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களது பெற்றோருடன் விழாவில் பங்கேற்க உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கட்-அவுட் எதுவும் வைக்கக் கூடாது என விஜய் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து, நீலாங்கரை முழுவதும் சுவர் ஓவியம் வரையும் பணியில் விஜய் ரசிகர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். 


விழா மேடை தயார்:


விழா நடைபெறும் மண்டபத்தில் அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜயின் இரண்டு படங்களுடன், திருவள்ளுவரின் படங்களும் இடம்பெற்றுள்ள ஒரு நீளமான பேனர் விழா மேடையில் இடம்பெற்றுள்ளது. அதில் “தமிழகம் முழுவதும் 2023ம் ஆண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வில் தொகுதி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மாணவிகளை கௌரவிக்கும் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா” என குறிப்பிடப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கான ஏற்பாடு:


மாணவர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகள் தொடர்பாக பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் “மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன் வந்து மேல்மருவத்தூர், தாம்பரம் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட 2 மண்டபங்களில் தங்கி தயாராகி விடுவார்கள். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக நீலாங்கரையை அடைந்து விடுவார்கள். அனைவருக்கும் நொறுக்குத்தீணி, தண்ணீர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி சரியாக 1 மணிக்குள் அனைவருக்கும் 12 வகை காய்கறிகளோடு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.




விழா நடைபெறும் இடம்


விஜய் மக்கள் இயக்கம்:


தமிழ் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாது என சொல்வார்கள். அந்த வகையில் முதலமைச்சர்களும் சரி, அரசியல் கட்சியின் தலைவர்களாகவும், தொண்டர்களாவும் பல நடிகர், நடிகைகள் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலின் அடுத்த வாரிசாக நடிகர் விஜய் வருவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.  தனது அரசியல் பயணத்திற்கான விதையை தனது ரசிகர் மன்றத்தை ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஆக மாற்றியதன் மூலம்15 ஆண்டுகளுக்கு முன்பே விதைத்து விட்டார் என்று சொல்லலாம்.


வேகம் காட்டும் விஜய்:


2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் பலர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். விஜய்யின் அனுமதியுடன் தான் இது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அரசியல் பிரவேசத்திற்கான பணிகலை விஜய் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி, இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வில் தொகுதி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மாணவிகளை விருது வழங்கி கவுரவிக்கிறார்.