கொடுமைகளை அனுபவித்த ஜெயிலை கோவிலைப் போல்ற புனித ஸ்தலமாக மாற்றியவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்று பேசியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
போர்ட் ப்ளேரில் இருக்கும் செல்லுலார் ஜெயிலுக்கு, ஹிந்துத்வ சிந்தாந்த தலைவரான சாவர்க்கர் சிறைவைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று தனது மரியாதை செலுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது பேசிய அவர், “நாட்டை சுதந்திரமடையச் செய்யும் தன்னுடைய பிறப்புரிமைக்கு ஜெயில் ஒரு தடைக்கல்லாக இருப்பதை மாற்றிக்காட்டினார் சாவர்க்கர். சாவர்க்கர் ஜெயிலில் இருந்துகொண்டே அதை நிரூபித்தார். கொடுமைகளை அனுபவிப்பதால் பிறப்புரிமைக்கு எந்தத் தடையும் வந்துவிடாது என்னும் செய்தியை உலகத்துக்கு கொடுத்தார்” என்றார்.
மேலும் சாவர்க்கரின் தேசப்பற்று சந்தேகப்படவே தக்கதல்ல என்றும், அவரிடைய கருணை மனுக்கள் குறித்து பேசுபவர்கள் கொஞ்சமாவது அவமானபடவேண்டும் என்றும் கூறினார். முன்னதாக காந்தியாரின் அறிவுரைப்படியே சாவர்க்கர் கருணை மனுவை எழுதியதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தக வெளியீட்டு விழாவின்போது பேசிய ராஜ்நாத் சிங், "சாவர்க்கருக்கு எதிரான ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறும் போக்கு அதிகரித்துள்ளது. சவார்க்கர் பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்ததால்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சிலர் உண்மைகளை மறைத்து பொய்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். பொதுவாக ஒரு கைதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு என்றாலும், அவர் தனது விடுதலைக்காக கருணை மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பதே உண்மை. காந்தியின் அறிவுறுத்தலின் பேரிலே விநாயக் தாமோதர் சாவர்க்கர் கருணை மனு அளித்தார் (இவர் ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்று இருந்தாலும் 12 ஆண்டுகளின் பின் 1924 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்). சாவர்க்கரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர் மகாத்மா காந்தி" என்று கூறினார்.
இந்திய கலாச்சார தளத்தில் சாவர்க்கரின் அளப்பரிய பங்கு குறித்து பேசிய அவர்."அடிமை சங்கலியின் பிணைப்பை உடைக்க மக்களை ஊக்குவித்தவர். பெண்களது உரிமைகள், தீண்டாமை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர். எவ்வாறாயினும், நாட்டின் கலாச்சார ஒற்றுமையில் அவரது பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சவார்க்கர் அரசியல் சிந்தனைகளை பாசிசத்தோடு இணைத்து பேசுகின்றனர். தீவிர இந்துத்வவாத சிந்தனை கொண்டவர் என்றாலும், கடைசி வரை ஒரு எதார்த்தவாதியாகத் தான் செயல்பட்டு வந்தார்" என்றும் கூறினார்.
கொல்லப்பட்ட சிங்கத்தை விட வேட்டைக்காரன் பார்வையில் வனத்தைப் பற்றிய கருத்தாக்கம் கட்டமைக்கப்படுவது போல, சில குறிப்பிட்ட சித்தாந்தங்களைக் கொண்டவர்களால் சாவர்க்கரைப் பற்றிய கருத்துக்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது என்று ராஜ்நாத் சிங் ஒப்பிட்டுப் பேசினார். "நீங்கள் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரை கீழ்த்தரமாகப் பார்ப்பது சரியல்ல. சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை இழிவுபடுத்தும் செயல் இனியும் பொறுத்துக் கொள்ளப்படாது ”என்று சிங் எச்சரிக்கை விடுத்தார்.