காந்தியின் அறிவுறுத்தலின் பேரிலே விநாயக் தாமோதர் சாவர்க்கர் கருணை மனு அளித்தகாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த போராளி, உணர்ச்சிமிக்க தேசபக்தரான வீர் சாவர்க்கர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.     


உதய் மகுர்கர், சிராயு பண்டித் ஆகியோர் எழுதிய Veer Savarkar: The Man Who Could Have Prevented Partition என்ற புத்தகத்தின் வெளியீட்டு  விழா டெல்லியில் உள்ள அம்பேத்கர் பன்னாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,    ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். 


புத்தக வெளியீட்டு விழாவின்போது பேசிய ராஜ்நாத் சிங், "சாவர்க்கருக்கு எதிரான ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறும் போக்கு அதிகரித்துள்ளது. சாவர்க்கர் பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்ததால்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சிலர் உண்மைகளை மறைத்து பொய்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.  பொதுவாக ஒரு கைதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு என்றாலும்,  அவர் தனது விடுதலைக்காக கருணை மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பதே உண்மை.  காந்தியின் அறிவுறுத்தலின் பேரிலே விநாயக் தாமோதர் சாவர்க்கர் கருணை மனு அளித்தார் (இவர் ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்று இருந்தாலும் 12 ஆண்டுகளின் பின் 1924 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்). சாவர்க்கரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர் மகாத்மா காந்தி" என்று கூறினார். 






இந்திய கலாச்சார தளத்தில் சாவர்க்கரின் அளப்பரிய பங்கு குறித்து பேசிய அவர்."அடிமை சங்கலியின் பிணைப்பை உடைக்க மக்களை ஊக்குவித்தவர். பெண்களது உரிமைகள், தீண்டாமை  போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர். எவ்வாறாயினும், நாட்டின் கலாச்சார ஒற்றுமையில் அவரது பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சவார்க்கர் அரசியல் சிந்தனைகளை பாசிசத்தோடு இணைத்து பேசுகின்றனர். தீவிர இந்துத்வவாத சிந்தனை கொண்டவர் என்றாலும், கடைசி வரை ஒரு எதார்த்தவாதியாகத் தான் செயல்பட்டு வந்தார்" என்றும் கூறினார். 


கொல்லப்பட்ட சிங்கத்தை விட வேட்டைக்காரன் பார்வையில் வனத்தைப் பற்றிய கருத்தாக்கம் கட்டமைக்கப்படுவது போல, சில குறிப்பிட்ட சித்தாந்தங்களைக் கொண்டவர்களால் சாவர்க்கரைப் பற்றிய  கருத்துக்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது என்று ராஜ்நாத் சிங் ஒப்பிட்டுப் பேசினார். "நீங்கள் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரை கீழ்த்தரமாகப் பார்ப்பது சரியல்ல. சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை இழிவுபடுத்தும் செயல் இனியும் பொறுத்துக் கொள்ளப்படாது ”என்று சிங் எச்சரிக்கை விடுத்தார்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், "  மத அடிப்படையில், இந்தியா பிரிவினைக்கு ஒப்புக் கொண்ட போது, அதை  கடுமையாக எதிர்த்தவர் சர்வார்க்கர். ஆங்கிலேயரின் சூட்சமத்தை உரத்தக் குரலிலும், வெளிப்டையாகவும் எதிர்த்தவர். இந்த உரத்தக் குரலில் ஒட்டுமொத்த தேசமும் பேசியிருந்தால் பிரிவனை நிச்சயமாக ஏற்பட்டிருக்காது" என்று தெரிவித்தார்.   


பசுக்காவலர்கள் என்ற பெயரில் சக மனிதர்களைத் தாக்குபவர்கள் இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள் - ஆர்.எஸ்.எஸ் தலைவர்..!      


சுதந்திரம் அடைவதற்கு முன்பே சர்வார்க்கர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் சிலர் செயல்பட்டு வந்தனர். ஆனால், உண்மையில் அவர்களின் நோக்கம் தேசிய ஒற்றுமைக்கு வழிவகுத்த சுவாமி விவேகானந்த், சுவாமி தயானந்த் சரஸ்வதி, யோகி அரவிந்த் ஆகியோரை சிறுமைப்படுத்தும் செயல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன" என்றும் தெரிவித்தார். 






இந்துக்களும், முஸ்லிம்களும் இரு வெவ்வேறு குழுவினர் அல்ல.  சிறுமான்மையினர், பெரும்பான்மையினர் என்று இல்லாமல் இந்தியர்களாக ஒன்றிணைந்து மட்டும்தான் ஓங்கிநிற்க முடியும். இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை.ஏனெனில், ஏற்கெனவே அவர்கள் ஒன்றிணைந்துதான் உள்ளனர் என்றும் கூறினார்.