உலகிலேயே அதிகளவில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. இந்தியாவில் மட்டும் மொத்தம் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் கிரிப்டோ கரன்சியை வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Continues below advertisement

உலகம் முழுவதும் டிஜிட்டல்மயமாகிவிட்ட சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பிட் காயின் தொடங்கி பல கிரிப்டோ கரன்சிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் கிரிப்டோ கரன்சி என்பது பாதுகாப்பற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது. கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே வலுத்து வருகின்றன.

ஆனால், கிரிப்டோ கரன்சியல் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு இதுவரை தடைவிதிக்கப்படவில்லை. இந்த சூழலில் உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் 10 கோடி பேர் கிரிப்ட்ரோ கரன்சியில் முதலீடு செய்து இருப்பதாக பிரோக்கர் டிஸ்கவரி மற்றும் பிரோக்கர் சூசர் நிறுவனங்களுடைய முடிவுகளின் ஒப்பீட்டின் மூலம் அறிய முடிகிறது.

Continues below advertisement

இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 2 கோடியே 74 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களும், ரஷியாவில் 1 கோடியே 74 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களும் உள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீயாவில் 1 கோடியே 30 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் உள்ளார்கள். இதை வைத்து ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிட முடியாது. அமெரிக்கா, ரஷியாவை விட இந்தியா இதில் முன்னிலை வகிப்பதற்கு முக்கிய காரணம் இங்குள்ள 138 கோடி மக்கள் தொகையாகும்.

ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் கிரிப்ட்ரோ கரன்சியை வாங்கியவர்களின் சதவீதத்தை கணக்கிட்டால் 7.30 சதவீதத்துடன் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உக்ரைன். அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 12.73 சதவீதம் பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். 11.91 சதவீதத்துடன் இந்த பட்டியலில் ரஷியா 2 வது இடத்திலும், 8.52 சதவீதத்துடன் கென்யா 3 வது இடத்திலும், 8.31 சதவீதத்துடன் அமெரிக்கா 4 வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு இன்னும் முழுமையான சட்டம் கூட வகுக்கப்படவில்லை. குறிப்பாக தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை. இத்தகைய நிலையற்ற தன்மை நிலவும் சூழலிலும் இந்தியாவில் 10 கோடி பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ஆனால், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையுடன் பிட் காயின் வளர்ச்சியும் ஒத்துபோகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிட் காயின் 50% வருமானத்தை கொடுத்துள்ளது. Ethereum, Ripple மற்றும் Dogecoin போன்ற தனியார் கிரிப்டோ கரன்சிகளும் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்துள்ளன.