கர்நாடக மாநிலத்தில் துப்புரவு பணியார்களுக்கு இலவச மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
கர்நாடக மாநில சமூகநலத்துறையின் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 'விதான சவுதா' படிக்கட்டுகள் அருகே துப்புறவு தொழிலாளர்களுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை 'விதான சவுதா', 'விகாச சவுதா' மற்றும் 'எம்.எஸ். கட்டடங்கள்' ஆகியவற்றில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர்களை வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார். நேற்று ( வெள்ளிக்கிழமை) முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள பத்து மாநகராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் “துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் அளித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதன் அவசியத்தையும் "அவர்களின் வாழ்வில் வலிமையைப் புகுத்த வேண்டும்" என்பதையும் பொம்மை அடிக்கோடிட்டுக் காட்டினார்.இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 600 துப்புரவு பணியாளர்களில் 400 பேருக்கு முதல் கட்டமாக வாகனங்கள் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “ கர்நாடக மாநிலத்தில் துப்புரவு பணியாளர்களின் வேலை மிக முக்கியமானது. மின்சார வாகனங்கள் விநியோகம் என்பது அவர்களின் பணியை கௌரவிக்கும் பல திட்டங்களில் ஒன்று. மேலும் அவர்களது வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை வழங்க அரசு பல திட்டங்களை வைத்திருக்கிறது. மேலை நாடுகளில் துப்புரவு தொழிலாளர்கள் காரில் பயணிக்கிறார்கள். கர்நாடகாவில் ஸ்கூட்டரில் பயணிக்கிறார்கள் . துப்புரவு தொழிலாளர்கள் கர்நாடகாவிலும் காரில் பயணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற முதல்வர், வரும் நாட்களில் அனைத்து தொகுதிகளிலும் தலா 100 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்க இருப்பதாக கூறினார் . இதன் மூலம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் துப்புறவு தொழிலாளர்கள் பயனடைவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக கர்நாடக மேலவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிஷ் குமார் கேள்விக்கு பதிலளித்த, நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி பசவராஜ் துப்புரவு தொழிலாளர்களின் நலன் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன், தேவைப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டித் தரப்படும். மங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பச்சனாடி, கடுபு கிராமத்தில் 6.32 ஏக்கர் நிலத்தில் 200 வீட்டுமனைகளை உள்ளடக்கிய குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.