உள்ளூர் மொழியில் பேசக்கூடிய ஊழியர்களை நியமிக்குமாறு வங்கிகளை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளார். வங்கிகளுக்கு ஆட்சேர்ப்பின்போது அனைவரையும் உள்ளடக்கும் வகையில் பணியாளர்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


 






மும்பையில் நடந்த இந்திய வங்கிகள் சங்கத்தின் 75வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், "நீங்கள் வியாபாரம் செய்வதற்காக இருக்கிறீர்கள். மக்களிடம் குறிப்பிட்ட விழுமியங்களை வளர்க்க நீங்கள் அங்கு இல்லை" என்றார்.


மேலும் பேசிய அவர், "பிராந்திய மொழியில் பேசாதவர்கள் வங்கி கிளையில் பணியாற்றும்போது, வாடிக்கையாளர்கள் இந்தி மொழியில் பேசவில்லை என்றால், அவர்கள் இந்தியராக இருக்க வாய்ப்பில்லை எனக் கூறுவது, தேசபக்தி அற்றவர்கள் என அவர்களை விமர்சிப்பது, செய்யும் தொழிலுக்கு நல்லது அல்ல என நான் நினைக்கிறேன்" என்றார்.


 






வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், "வங்கி கிளைகளில் பணியமர்த்தப்பட்ட நபர்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும். உள்ளூர் மொழியில் பேசத் தெரியாதவர்களை வாடிக்கையாளர்களுடன் பணிபுரியும் பாத்திரங்களில் நியமிக்கக் கூடாது. ஆட்களை பணியமர்த்துவதற்கு பல விவேகமான வழிகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்" என்றார்.


வாடிக்கையாளர்களை பாசிட்டிவான ஆற்றலுடன் அணுக வேண்டும் என வங்கிகளை நிர்மலா சீதாராமன் ஊக்குவித்துள்ளார். "நாங்கள் உங்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கிறோம் என நீங்கள் தற்போது சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். 


சுறுசுறுப்பாக இருங்கள். எங்கு வேண்டுமானாலும் சந்தித்து வியாபாரம் செய்ய தயாராக இருக்கிறோம் என்பதை வாடிக்கையாளர்களை சொல்லுங்கள். விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக தி இந்தி செய்தி வெளியிட்டுள்ளது.