Sabarimala Temple:பங்குனி உத்திர விழாவுக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதேபோன்று, ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.
நடைதிறப்பு:
இதுதொடர்பான தேவஸ்தான அறிக்கையில், ”சபரிமலை கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் ஜெயராமன் நம்பூதிரி நடையை திறக்க உள்ளார். அன்றிலிருந்து 10 நாட்களுக்கு ஏப்ரல் 5-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5ஆம் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலையே கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா முடிவடைகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜைகள்:
தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கொடி ஏற்றி வைத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படமாட்டாது என்று தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க