தெலுங்கு  திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவரான  சீதாராம சாஸ்திரி கடந்த நவம்பர் 24 ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் , நேற்று மாலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வரும் ஜனவரி 7ம் தேதிக்கு வெளியாக உள்ள RRR திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தோஸ்தி எனும் பாடலை எழுதியவர் சீதாராம சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ராஜமௌளி, ராம் சரண் உள்ளிட்ட படக்குழுவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.






 


 இந்த சூழலில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர். முன்னதாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் (டிசம்பர் 3 ஆம் தேதி ) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.





ஆனால் பழம்பெரும் பாடலாசிரியர்   சீதாராம சாஸ்திரியின் மறைவையொட்டி படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கின்றனர்.இது குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ள படக்குழு “எதிர்பாராத காரணங்களால் டிரைலர் 3 ஆம் தேதி வெளியடப்படவில்லை, தேதி பின்னர் அறிவிக்கப்படும் “ என குறிப்பிட்டுள்ளனர்.







முன்னதாக கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்றின் வெளியீட்டையும் படக்குழுவினர் தள்ளி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் , ஜூனியர் என்.டி.ஆருடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்திற்கு பிறகு ராஜமௌளி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர் என்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.