கோவை மாவட்டத்தில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.


கோவை மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை காட்டிலும், அதிக அளவு பெய்துள்ளது. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழை பொழிவு இருந்துள்ளது எனவும், நவம்பர் மாதத்தில் மட்டும் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது எனவும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


கோவை மாவட்டத்தில் பல மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு - கேரளா இடையே பேருந்து போக்குவரத்து இன்று துவங்கியுள்ளது. உக்கடம், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல கேரள மாநில பேருந்துகளும் கோவைக்கு இயக்கப்படுகின்றன. ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, இரு மாநில பேருந்து போக்குவரத்து துவங்கியுள்ளது.


கோவை மாவட்டம் சுகுணாபுரம் அருகேயுள்ள கோலமாவு மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க மதுக்கரை வனத்துறையினர் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.


கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்றைய தினம் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். முந்தைய தினத்தை விட நேற்று 3 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டது.


நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஊட்டி - மஞ்சூர் இடையே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல குன்னூர் - ஊட்டி மலை இரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை இரயில் சேவை டிசம்பர் 7 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.


குன்னூர் பகுதியில் சி.எம்.எஸ். என்ற தனியார் விடுதியில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்த விடுதி மூடப்பட்டது.


மேட்டூர் அணையின் இன்றைய நீர் வரத்து 11,500 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 120 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து உபரி நீராக 11,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் ஆத்தூர் இளங்கோவன் வங்கி லாக்கர் நேற்று நீதிமன்றத்தின் உத்தரவுப்படி திறக்கப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 


சேலத்திலிருந்து அரூர் வழியாக வாணியம்பாடி வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக, அரூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. மாற்று இடம் வழங்காததால் குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர்.