இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் கவர்னரும், உலகின் சிறந்த பொருளாதார வல்லுனர்களில் ஒருவருமான ரகுராம் ராஜன் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டது, காங்கிரஸ் கட்சியினரை மகிழச்சியை ஏற்படுத்திய நிலையில் பாஜகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ரகுராம் ராஜன் ராகுலுடன் சவாய் மாதோபூரில் இருந்து ராஜஸ்தானின் தௌசா வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார்.


என்ன பேசினார்கள்


காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறியதாவது, "பொருளாதாரம், ஜிஎஸ்டி, தனியார் முதலீடு மற்றும் ஏற்றுமதியை எவ்வாறு அதிகரிப்பது என்றும், ரூபாய்-டாலர் மதிப்பு விகிதத்தின் தாக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலுவாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரின் கருத்தை ராகுல் காந்தி அறிய விரும்பினார். காங்கிரஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்து, ரகுராம் ராஜனை அடுத்த நிதியமைச்சராகப் பார்க்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர், அவர்களில் சிலர், பாஜகவிடம் பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற சிறந்த பொருளாதார வல்லுநர்கள் இருப்பதாக கிண்டல் செய்தனர்", என்றார்.






மல்லிகார்ஜுன் கார்கே ட்வீட்


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள ட்வீட்டில், "வலுவான மற்றும் நல்ல பொருளாதாரம் என்பது வளர்ச்சி மற்றும் பொதுநலன்களின் கலவையாகும். அந்த இந்தியாவை மீட்பதே எங்கள் நோக்கம். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முன்னணி பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன், எதிர்காலத்திற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கும் எங்கள் முயற்சியில் பாரத் ஜோடோ யாத்ராவில் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்", என்று எழுதியிருந்தார்.






ராகுல் காந்தி ட்வீட்


ராகுல் காந்தி தனது டீவீட்டில் ட்வீட், “சுதந்திரம் ஜனநாயகத்தின் சாராம்சம், நல்லிணக்கம் ஒரு வளமான பொருளாதாரத்தின் அடித்தளம். நாம் ஒற்றுமைக்காகவும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் நடக்கிறோம். ரகுராம் ராஜன் பொருளாதாரத்தின் அடையாளமாக இருக்கிறார்; இந்தியாவின் வளர்ச்சிக்கான முழுமையான பார்வை கொண்ட அவர், நரேந்திர மோடியின் கீழ் வளர்ச்சியடைந்த பணமதிப்பிழப்பு மற்றும் குரோனி முதலாளித்துவம் போன்ற முடிவுகளுக்கு எதிராகப் பேசினார். பிரதமர் மோடியின் கொள்கைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரிசர்வ் வங்கி பொறுப்பில் இருந்து விலகிய ராஜன், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை குறித்த தனது முற்போக்கான கருத்துக்களையும் வெளிப்படுத்த தயங்கவில்லை", என்று எழுதியிருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: புயலாக மாறுதா? 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகுமா? வானிலை அப்டேட் என்ன?


அமித் மால்வியா ட்வீட்


பாஜக-வின் ஐடி செல் தலைவர் அமித் மால்வியா, இதுகுறித்து விமர்சனம் செய்துள்ளார், "ரகுராம் ராஜன், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர், காங்கிரஸ் நியமனம் செய்த நபர், அதனால் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோவில் இணைகிறார். அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் தன்னை அடுத்த மன்மோகன் சிங் என்று நினைத்துக் கொள்கிறார். இந்தியப் பொருளாதாரம் குறித்த அவரது வர்ணனையை அலட்சியமாக நிராகரிக்க வேண்டும். இது வெறும் சந்தர்பவசம்", என்று ட்வீட் செய்திருந்தார்.






விஜய் சவுதைவாலே ட்வீட்


பொருளாதாரம் குறித்த கணிப்புகளால் உலக கவனத்தை ஈர்த்த ரகுராம் ராஜனுக்கு பின், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்து, யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த மற்றொரு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் வெளியுறவுத் துறைத் தலைவர் விஜய் சவுதைவாலே ட்வீட் செய்ததாவது, "ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒருவர் பிரதமராக இருந்தார், அவரால் நாடு மதிப்புமிக்க பத்து ஆண்டுகளை இழந்தது. மோடிக்கு நன்றி, இந்தியா அந்த தவறை மீண்டும் செய்யாது. ரகுராம் ராஜன் டெல்லியில் இருந்து சிகாகோ வரை கூட அப்படியே நடந்து செல்லலாம்", என்று மன்மோகன் சிங்கை குறிவைத்து எழுதி இருந்தார்.