குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடி பிரிவில் சேர்க்க மக்களவையில் பல்வேறு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், இந்த மசோதா ஒப்புதலுக்காக, மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள குருவிக்காரர் சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் சமுதாயத்துடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் குளிர் காலக் கூட்டத்தொடரில், மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர், அர்ஜுன் முண்டா தமிழ்நட்டில் உள்ள குருவிக்காரர் சமூக மக்களை பழங்குடியின சமுதாயத்தில் இணைக்கும் மசோதாவினை கொண்டுவந்தார்.
இதற்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்து ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது. மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர், அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமலுக்கு வரும். இந்த சட்டம் மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் முடிந்து நடைமுறைக்கு வர 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.