5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த கர்நாடக கல்வித்துறை எடுத்துள்ள முடிவால், மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற முறை ரத்து செய்யப்பட உள்ள நிலையில், துணைத் தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 


கர்நாடக பள்ளி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் (KSEAB) அண்மையில் ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. இதில், 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:


பொதுத் தேர்வு அட்டவணை


5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதே வகுப்பு மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி முறையும் ரத்து செய்யப்படுகிறது. கர்நாடக பள்ளி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் பொதுத் தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இதன்படி மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 17ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 


விடைத் தாள்கள் மார்ச் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை திருத்தப்பட உள்ளன. ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் விடைத் தாள்கள் திருத்தப்பட்டு, தயாராகிவிட்டால், ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 8ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி அன்று வெளியாக உள்ளன.


ஆண்டு பொதுத் தேர்வுக்கு மாணவர்களின் பெயர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும். 50 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். மொத்தம் 2 மணி நேரங்கள் தேர்வு நடைபெறும். பள்ளி சார்பில் மாதிரி வினாத் தாள்கள் தயார் செய்யப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் வழக்கமாகத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் தோல்வி அடையும் மாணவனுக்கோ மாணவிக்கோ துணைத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அதில் தோல்வி அடையும் மாணவ/ மாணவியால் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியாது என்று சில கர்நாடக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் சில ஊடகங்களில், அடுத்த வகுப்புக்குச் செல்வதில் பிரச்சினை இல்லை என்றும் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு, பள்ளி சார்பில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என்று  தகவல் வெளியாகி உள்ளது. 


10 மதிப்பெண்கள் கேள்வி வடிவிலும், 20 மதிப்பெண்கள் கொள்குறி வகையிலும் 20 மதிப்பெண்கள் விரிவாக எழுதும் வகையிலும் அமைந்திருக்கும். மீதமுள்ள 50 மதிப்பெண்கள் கடந்த கால மாணவர்கள் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும். 


ஏற்கெனவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு FA 1 மற்றும் FA 2 ஆகிய மதிப்பீட்டுத் தேர்வுகளும் SA-1 தேர்வும் நடந்து முடிந்துள்ளன. விரைவில் SA 2  மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.