இந்தியாவில்  ஒரே நாளில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 942 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து  48 ஆயிரத்து 421 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 3.66 லட்சம், நேற்று 3.29 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று  3.48 லட்சமாக அதிகரித்தது. 


 





இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில்  3 லட்சத்து  48 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 29 லட்சத்து 92 ஆயிரத்து 517-இல் இருந்து 2 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 938- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து  205 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 992-ல் இருந்து 2 லட்சத்து 54 ஆயிரத்து 197-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 338 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 90 லட்சத்து 27 ஆயிரத்து 304இல் இருந்து ஒரு கோடியே 93 லட்சத்து 82 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது.


 


கொரோனா தொற்றி இருந்து குணமடைந்தோர் விகிதம் 82.75 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.09 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37 லட்சத்து 4 ஆயிரத்து 99-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 11,122 ஆக குறைந்தது.  மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர், சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதுவரை 17 கோடியே 52  லட்சத்து 35 ஆயிரத்து 991 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.