அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 


இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. 


அயோத்தி ராமர் கோயில் திறப்பு:


இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் திங்கள்கிழமை (ஜனவரி மாதம் 22ஆம் தேதி) அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை ராமர் கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளது.


இவர்களை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


ராமர் கோயில் திறப்பால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றன.


பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு:


ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதியன்று மதியம் 2:30 மணி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, புதுச்சேரி, திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்த மகாராஷ்டிர அரசின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சட்டத்துறை மாணவர்கள் 4 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரிணைக்கு வர உள்ளது. நீதிபதிகள் குல்கர்னி, நிலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கிறது.


இதையும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு - எங்கெல்லாம் விடுமுறை? மாநிலங்கள் லிஸ்ட் இதோ!