இந்தியாவின் முக்கிய அண்டை நாடாக இருப்பது மியான்மர். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதி 1,500 கி.மீட்டருக்கு மேல் நீள்கிறது. வரலாற்று ரீதியாகவும் இன ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல ஆண்டுகளாக உறவை பேணி வருகிறது.


மியான்மர் நாட்டுடன் நெருக்கமான உறவை பேணி வரும் இந்தியா:


இரு நாடுகளும் நெருக்கமான உறவை பேணி வருவதால், இந்திய - மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் இந்தியர்கள், மியான்மர் எல்லைக்குள் விசா இன்றி 16 கிமீ வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, இந்திய - மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் மியான்மர் நாட்டு மக்கள், இந்திய எல்லைக்குள் 16 கிமீ வரை விசா இன்றி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 


இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


இந்த நிலையில், இதை உறுதி செய்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அசாம் போலீஸ் கமாண்டோ பட்டாலியன்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டு பேசிய அவர், "மியான்மருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர உள்ளது. மியான்மர் அருகே உள்ள இந்திய எல்லையை வங்காளதேசம் அருகே உள்ள இந்திய எல்லை போல் பாதுகாப்போம். மியான்மர் உடனான ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்துள்ளது" என்றார்.


 






அதிரடி காட்டும் மத்திய அமைச்சர் அமித் ஷா:


சுதந்திரமாக நடமாடும் ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, இந்திய - மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த நான்கரை ஆண்டுகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. அந்த வழியாக வரும் அனைவரும் விசா பெற்றிருக்க வேண்டும்.


கடந்த 2023ஆம் ஆண்டு, இதுகுறித்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பேசுகையில், "சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இந்திய-மியான்மர் எல்லையில் சுந்திர நடமாடும் ஒப்பந்தத்தை நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தேசிய குடிமக்கள் பதிவேட்ட்டை அமல்படுத்தவும் மியான்மர் எல்லையில் வேலி அமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகிறது" என்றார்.


மணிப்பூருடன் 390 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது மியான்மர். ஆனால், 10 கிமீ தொலைவில் மட்டுமே வேலி அமைக்கப்பட்டுள்ளது.