உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்த பிறகு ராமர் கோயில் கட்டும் பணி அயோத்தியில் தீவிரமாக கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் அயோத்தியில் நடைபெற்று வருகிறது.


ராமர் கோயில் திறப்பு விழா:


ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாட்டின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். விவிஐபிக்களாக மட்டும் 7 ஆயிரம் பேரை அழைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் தொடக்க விழாவை காண்பதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஆனந்த் மகோத்சவ் எனப்படும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு யாத்ரீகர்கள் வர வேண்டாம் என்று ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் சம்பத்ராய் வேண்டுகோள் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வர வேண்டாம் என வேண்டுகோள்:


இதுதொடர்பாக, சம்பத்ராய் பக்தர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், “வரும் 22ம் தேதி அயோத்திக்கு யாத்ரீகர்கள் வர வேண்டாம். சிறியதோ பெரியதோ உங்களுக்கு அருகில் உள்ள கோயிலில் ஒன்று கூடுங்கள். வேறு எந்த தெய்வமாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமான கோயிலுக்குச் செல்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டத்தை குறைக்கும் நோக்கத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தாலும், அவருக்கு பக்தர்கள் பலரும் தங்களை வர வேண்டாம் என கூறியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 


புத்தாண்டு பிறந்தது முதல் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 16ம் தேதி முதல் திறப்பு விழாவிற்கான சடங்குகள் தொடங்கப்பட உள்ளது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ராமர் கோயில் 22ம் தேதி திறக்கப்பட்டாலும், கோயில் கட்டுமான பணிகள் தற்போது வரை முழுமையாக நிறைவடையவில்லை.


பன்மடங்கு பாதுகாப்பு:


ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அனைத்து சடங்குகளும் லட்சுமிகாந்த் தீட்சிதர்களால் நடத்தப்பட உள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கான நாட்டின் பல பகுதிகளில் இருந்து கற்கள் கொண்டு செல்லப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், இந்தியாவின் தொழில், திரைப்பிரபலங்கள் பங்கேற்க இருப்பதால் பன்மடங்கு பாதுகாப்பு அயோத்தியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: IANS செய்தி முகமை நிறுவனத்தை வாங்கிய அதானி! ஊடகத்துறையிலும் ஆதிக்கம்!


மேலும் படிக்க: அதிர்ச்சி.. குடித்துவிட்டு ரயில் ஓட்டினார்களா? ரத்தத்தில் மது அளவு.. சோதனையில் 1761 லோகோ பைலட்கள் தோல்வி