நடப்பு மக்களவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக, இந்தாண்டின் இறுதியில், முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்களை மிரட்டும் விதமாக மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி மத்திய அரசு ரெய்டு நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்:
இச்சூழலில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல, சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் அசாம் கானுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் பேசுகையில், "எதிர்க்கட்சியை எப்படி வேண்டுமானாலும் நசுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. (I.N.D.I.A) ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறும் அதே நாளில் ஏன் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்புகிறது என்று நான் கேட்க விரும்புகிறேன்? இரண்டு நாட்களுக்குப் பிறகு கொடுக்க முடியாதா? அரசியலுக்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோசி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். உடனே, ஆசம் கான் மீது ரெய்டு நடந்தது. மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் ஆட்களை கைது செய்வதே இவர்களின் அரசியல்" என்றார்.
தமிழ்நாடு ஆளுநரை வெளுத்து வாங்கிய கபில் சிபல்:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்த கபில் சிபல், "முதலில் நான் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். ஆளுநர் ஆர்.என். ரவி அங்கு என்ன செய்கிறார் தெரியுமா? உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும்.
ஏனென்றால், தமிழ்நாட்டில் இதுவரை மத பிரச்னைகள் ஏற்பட்டதில்லை. அங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆட்சி செய்து, ஆட்சி நடத்தி வருகின்றனர். ஆர்.என். ரவியை அனுப்பியதன் நோக்கமே, மதத்தின் அடிப்படையில் சர்ச்சையை உருவாக்குவதுதான். நீங்கள்தான் குற்றவாளிகள், நீங்கள்தான் இந்த பிரச்னையை எழுப்புகிறீர்கள். ஆளுநர் அவர்களின் (மத்திய பாஜக அரசு) அரசியல் திட்டத்தைல முன்னெடுத்துச் செல்கிறார்" என்றார்.
ஆளுநர் - ஆர்.என்.ரவி மோதல்:
சமீப காலமாகவே, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசு தயாரித்து ஆளுநர் உரையை மாற்றி வாசித்தது முதல் செந்தில் பாலாஜி விவகாரம் வரை ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம்தான்.
அதேபோல, கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியப்பதில் ஆளுநருக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் பிரச்னை நீடித்து வருகிறது. தெலங்கானாவில் கே.சி.ஆர் அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளிப்பதில்லை என தொடர் குற்றச்சாட்டு உள்ளது.