Cauvery Water: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


காவிரி பிரச்சனை: 


தமிழ்நாட்டிற்கும்  - கர்நாடகாவிற்கு இடையே நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்ட நிலையில், அதனை சரி செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவை வாரியம் வரையறுத்தது. ஆனால், போதிய நீர் இல்லை, கர்நாடக மாநிலத்தில் குடிநீருக்கே பற்றாக்குறை என்ற பல்வேறு காரணங்களை அடுக்கி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் அம்மாநில அரசு பாரப்பட்சம் காட்டி வருகிறது.


இந்நிலையில், நடப்பாண்டிற்கான பங்கீட்டு தண்ணீரை கர்நாடகம் தர மறுத்து வருவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் ஒரு புதிய மனு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.   இதற்கிடையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.  கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 


அனைத்து கட்சி கூட்டம்:


அதேநேரம், 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இரு அரசும் விடுத்த கோரிக்கையை விசாரிக்க காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நீரை கூட கர்நாடகா அரசு முழுமையாக திறந்துவிடவில்லை. இது ஒரு புறம் இருக்க காவிரி நதிநீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்ற பரிந்துரையை கேட்டு கர்நாடகா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை பற்றி பேசுவதற்காக டெல்லியில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அவசரமாக அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில்  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளது.


கைவிரித்த கர்நாடக அரசு:


இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மழை இல்லாததால் கர்நாடகம் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடும்  சூழ்நிலையில் கர்நாடகா இல்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடன் மனு அளிக்கவும் உள்ளோம். கர்நாடகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவே 70 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. எங்களிடம் 53 டிஎம்சி தண்ணீர் மட்டும் உள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது" என்றார்.




மேலும் படிக்க 


நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு முன்பு அனைத்துக்கட்சி கூட்டம்.. மத்திய அரசு மெகா பிளான்