ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 200 தொகுதிகளில் 100 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.


ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கப் போவது யார்?


தற்போது, ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், இந்த முறை ஆட்சியை தக்க வைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி நிலவி வந்தது.


இதை தீர்க்க காங்கிரஸ் மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக, வரவிருக்கும் தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்தும் ராஜஸ்தானில் நிலவும் உட்கட்சி பூசலை தீர்த்து வைக்கும் நோக்கிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அதன் விளைவாக, அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்தது.


இச்சூழலில், ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தானில் வரும் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


அசோக் கெலாட்டுக்கு பின்னடைவா?


இந்த நிலையில், ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 127 முதல் 137  தொகுதிகள் வரையில் பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.


அதேபோல, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், 59 முதல் 69 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக யார் வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, பாஜகவின் வசுந்தர ராஜே சிந்தியா முதலமைச்சராக வர வேண்டும் என 35 சதவிகிதத்தினரும் தற்போதைய முதலமைச்சருமான அசோக் கெலாட் வர வேண்டும் என 20 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இன்னும் 6 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தானில் இருக்கும் 25 தொகுதிகள் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், சட்டப்பேரவை தேர்தல் நடந்து 5 மாதங்களில் நடந்த மக்களவை தேர்திலில் 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதையும் படிக்க: Five State Elections: மக்களவை தேர்தலுக்கான செமி பைனல்.. ஐந்து மாநில தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்